‘இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேசன்ஸ்’ எல் எல் பி & லாக் லைன் பிக்சர்ஸ் சார்பில், மோகனா மஞ்சுளா S தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘டியர் ரதி’. எழுதி இயக்கியிருக்கிறார், பிரவீன் கே.மணி. இதில் சரவண விக்ரம், ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ், யுவராஜ் சுப்பிரமணியம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பெண்களிடம் இயல்பாக பழகுவதற்கு கூச்ச சுபாவமும், பயமும் கொண்டவர், சரவண விக்ரம். இதன் காரணமாகவே, அவரது காதலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் போகிறது. இதனால், பெண்களிடம் இருக்கும் அவரது பயத்தை போக்க, சரவண விக்ரமின் நண்பர், பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானுடனான சந்திப்பை உருவாக்குகிறார். சரவண விக்ரமிறகும் ஹஸ்லி அமானுடன் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே அவருடன் ஒருநாள் முழுவதும் ஊர்சுற்ற விரும்புகிறார். ஹஸ்லி அமானின் சம்மதத்துடன், இருவரும் ஊர்சுற்ற கிளம்புகிறார்கள். இந்நிலையில், ஹஸ்லி அமானைத்தேடி, துப்பாக்கி சகிதமாக ஒரு கும்பல் வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், டியர் ரதி.
சின்னத்திரை வாயிலாக நடிப்புப்பயிற்சி பெற்ற, நாயகனாக நடித்திருக்கும் சரவண விக்ரம், ஒரு சில காட்சிகளைத்தவிர மற்ற காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஹஸ்லி அமான், எளிமையான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கிறார், ராஜேஷ் பாலச்சந்திரன். அறிமுக காட்சிகளில் ஆச்சர்யப்பட வைத்தாலும், அதன் பிறகு பெரிதாக கவனம் பெறவில்லை. அவரும் அவரது கோஷ்டியினரும், பிளாக் காமெடி என்ற பெயரில் என்னமோ செய்கிறார்கள்! ஆனால், சிரிப்பு மட்டும் வரவில்லை.
லோகேஷ் இளங்கோவன், ஒளிப்பதிவில் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் பின்னணி இசை கவனம் பெறுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் கே.மணி, காதல், காமம் குறித்து வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், திரைக்கதையும் குழப்பத்தையே தருகிறது.
‘டியர் ரதி’ – இயக்குநருக்கு மட்டும்!