வெளியீட்டுக்கு முன்பாகவே வியாபாரத்தில் கலக்கும் ‘தீபாவளி போனஸ்’!

ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை எதார்த்தமான வாழ்வியலாகவும், குடும்பத்தோடு பார்க்கும் கமர்ஷியல் படமாகவும் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் பல தரமான சிறு முதலீட்டு படங்களை வெளியிட்டு வரும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதோடு, படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பர பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது முயற்சியின் மூலம் ‘தீபாவளி போனஸ்’ சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்த்ரிகையாளர்கள் படம் மிக எதார்த்தமாகவும், மக்களின் வாழ்வியலாகவும் இருப்பதாக பாராட்டியதோடு, படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கான தீபாவளி கொண்டாட்டமாகவும் இருக்கும், என்றும் பாராட்டியுள்ளனர். மேலும், படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்கள்.

படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனிஷ் பேசுகையில்,

“தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சிறு முதலீட்டு படங்களை வெளியிடும் நிறுவனம் என்றும், குறைந்த திரையரங்கம் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் நிறுவனம் என்று தான் இதுவரை இருந்தது. ஊடகங்கள் கொடுத்த ஊக்கம் மற்றும் ஆதரவால், ‘தீபாவளி போனஸ்’ படம் மூலம் நல்ல கமர்ஷியல் படம் மற்றும் வணிக ரீதியாக பெரிய வருமாணம் ஈட்டக்கூடிய படத்தை கையாளும் நிறுவனமாக உயர்ந்திருக்கிறது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் எங்களிடம் வருவதற்கு ஒரு நீண்ட பயணம் தேவைப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு இந்த படம் வர வேண்டும் என்பதற்காக இந்த படத்தின் இயக்குநர் தவம் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் ஒவ்வொரு படத்தை வெளியிடும் போதும், இந்த படத்தின் இயக்குநரிடம் இருந்து கனமான பதிவு வரும்.  நம்ம படம் எப்போது வரும், என்று உருக்கமாக கேட்பார். அதில் இருந்தே அவருடைய ஏக்க, தவிப்பு தெரியும். அதேபோல், இந்த படத்தின் தயாரிப்பாளர் இதுவரை எந்த விசயத்திலும் தலையிடவில்லை. கதையை கேட்டு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டார். அவர்கள் அனைவரும் நம்பிக்கையோடு பணியாற்றியிருக்கிறார்கள்.

தயாரிப்பாளரின் நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு அனைவரும் உண்மையாக உழைத்து இப்படி ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் பெருமையான விசயம் என்னவென்றால், இதுபோன்ற பணிகளை செய்ய தமிழ் சினிமாவில் ஐம்பது பேர் இருப்பார்கள், அவர்களைப் பற்றி விசாரித்து நான் தான் வேண்டும் என்று கேட்டு, ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் மூலம் தான் படம் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால் தான் நாங்களும் இந்த அளவுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 100 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம். படத்தின் ஆடியோ உரிமையை நல்ல விலைக்கு விற்பனை செய்து கொடுத்திருக்கிறோம். அதேபோல் வெளிநாட்டு திரையிடலும் இன்று உறுதியாகியுள்ளது. அதை இப்போது தான் இயக்குநரிடம் தெரிவிக்கிறேன். அதேபோல், இரண்டு முன்னணி ஒடிடி தளங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதுவும் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். தீபாவளிக்கு ஒருவாரம் முன்பு வெளியாகும் போது சிலர் சில கருத்துக்களை சொன்னார்கள். குறிப்பாக தீபாவளியன்று வெளியிடலாமே, என்றார்கள். அதற்கு நாங்கள் ரெடி தான், ஆனால் தற்போதைய சூழல் என்னவென்று உங்களுக்கே தெரியும். தீபாவளிக்கு முன்பு வெளியிடுவது, தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஒரு சூழலாக இருக்கிறது, எனவே இது தீபாவளிக்கான சரியான படமாக இருக்கும். படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும் படத்தை பாராட்டியுள்ளனர். எனவே, இந்த தீபாவளி போனஸ் எங்களுக்கு போனஸாகவே இருக்கும்.” என்றார்.