‘டெவில்’ –  விமர்சனம்!

‘டெவில்’ திண்டுக்கல் சீனிவாசனின் உளறல்!

விதார்த் – பூர்ணா –  திரிகுன் – சுபஸ்ரீ ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து, சவரக்கத்தி படத்தினை இயக்கிய ஆதித்யாவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம், டெவில்.

எத்தனையோ தமிழ்ப் படங்களில் முக்கோணக் காதல் கதையினை சொல்லி விட்டனர். நம்ம என்ன வித்தியாசமா சொல்லாம்னு யோசிச்ச… மிஷ்கின் சகோதரர்களின் வித்தியாசமான!? படைப்பே…  முக்கோணக் கள்ளக்காதல் படமான, டெவில். இந்தப்படத்திற்கு, மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார்.

விதார்த், பிரபலமான வழக்கறிஞர். சுபஸ்ரீ, இவரது ஆசை நாயகி, கள்ளக்காதலி எப்படி வேணும்னாலும் சொல்லிக்கலாம். விதார்த், அலுத்துப்போன சமயத்தில இன்னொருத்தோரோட சல்லாபிக்கிறாரு, சுபஶ்ரீ.

இந்த உன்னதமான, முக்கோணக் காதலுக்கு இடையில, விதார்த்துக்கும், பூர்ணாவுக்கும் கல்யாணம் நடக்குது. கல்யாணமான ராவுலேயே, விதார்த் சுபஶ்ரீயை தேடி ஓடுறாரு. சில நாட்களில் விதார்த்தின் கள்ளக்காதல் விவகாரம், பூர்ணாவுக்கு தெரிய வருது. ரெண்டு பேரும் பிரியுறாங்க.

இந்த சமயத்துல தான், கதையில முக்கியமான திருப்பமா, குழப்பமான மன நிலையில காரை ஓட்டிக்கிட்டு எங்கேயோ போறாங்க, பூர்ணா. அந்த சமயத்தில பைக்கில வர்ற திருகுன் மேல காரால இடிக்கிறாங்க. அதுக்கப்புறம், இருவருக்கும் நட்பு தொடரது. என்னோட அம்மாவா உங்கள நினைக்கிறேன்னு உருகுறாரு திருகுன். பூர்ணாவும் நான் ஒங்கள என் நண்பனா நினைக்கிறேன்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் இதுவும் கள்ளகாதலா மாறுகிற சமயத்துல, திருந்திட்டேன்னு.. வந்து நிக்கிறாரு, விதார்த், இதுக்கு அப்புறமா ஒரு கொலை நடக்குது! அதுக்கு அப்புறமா என்ன நடந்தது!? என்பதே.. டெவில் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

வழக்கறிஞராக நடித்திருக்கும் விதார்த்துக்கு, அவரோட நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அளவிற்கு, பெரிதாக எதுவும் இல்லை. பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார்.

பூர்ணாவுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள கதாபாத்திரம். அவரும் உணர்ந்து நடித்துள்ளார். காரின் ஸ்டெப்னி மாற்றும் தருணத்தில்,  திரிகுன் மீது சபல படுவது, கணவன் இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை கண்டவுடன், தவிப்பது கொலை நடந்த இடத்தில் மிரள்வது. திருகுனை அடிப்பது என எல்லாக் காட்சிகளிலுமே சிறப்பான நடிப்பினை வெளிப்படுதுகிறார். அவரது கதாபாத்திர வடிவமைப்பில் தான், முரணாக தெரிகிறது.

திரிகுன் மற்றும் சுபஸ்ரீ ஆகியோரின் நடிப்பும் ஓகே..

மிஷ்கின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் க்ளைமாக்ஸை மாற்றும் சக்தியாக நடித்திருக்கிறார். அவரை நீங்கள் கால பைரவராகவோ, சித்தராகவோ எடுத்துக்கொள்ளலாம்!

ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவில், இரவு நேரக் காட்சிகள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது. ஆனால், அநேக காட்சிகளில் கோணங்கள் சலிப்பினை ஏற்படுத்துகிறது.

இசையமைத்திருக்கிறார், மிஷ்கின். காட்சிகளுக்கு ஏற்றபடி பிண்ணனி இசை பொருத்தமாக இல்லை. அனைத்துகாட்சிகளுக்கும், ஒரே மாதிரியான இசை. இதனால், நடிகர்களின் உணர்வுகள்  சரியாக வெளிப்படவில்லை. பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை.

ஆட்டோ டியூன் உதவியுடன் பாட்டுப்பாடும் சூப்பர் நடிகர்களிடையே, இயல்பிலேயே சூப்பராக பாட்டுப்பாடும் மிஷ்கின், இசையால் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்!?

படத்தொகுப்பாளர் இளையராஜா, அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்!?

முக்கோண கள்ளக்காதல், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தான், படத்தின் கதை.  அதை உணர்வுப்பூர்வமாக திரைக்கதையாக்கும் முயற்சியில் தோற்றுப் போயிருக்கிறார், இயக்குநர் ஆதித்யா.

மொத்தத்தில், ‘டெவில்’ திண்டுக்கல் சீனிவாசனின் உளறல்!