இட்லி கடை, இத்திரைப்படம் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள நான்காவது படம். முதல் படமான ப.பாண்டி படத்திலேயே, தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்து, ரசிகர்களிடத்தில் செல்வாக்கை பெற்றார். தொடர்ந்து வெவ்வேறு கதைக் களங்களை கொண்ட படங்களாக இயக்கி வரும் அவரது இயக்கத்தில், இத்திரைப்படம் எப்படி இருக்கிறது.
இட்லி கடை திரைப்படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ மற்றும் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தனுஷ் தயாரித்து, இயக்கி நடித்திருக்கிறார். அவருடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பான்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி இளவரசு, கீதா கைலாசம், தமிழ் கௌதமன், பிரிகிடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்க, கிரண் கௌஷிக் ஒளிப்பதிவினை செய்துள்ளார்.
சங்கராபுரம் எனும் ஒரு கிராமத்தில், சிவநேசன் (ராஜ்கிரண்) தன்னுடைய மனைவி (கீதா கைலாசம்), மகன் முருகன் (தனுஷ்) ஆகியோருடன் வசித்து வரும் அவர், ஒரு சிறிய இட்லி கடையையும் நடத்தி வருகிறார். காலப்போக்கில், அந்தக்கடை ஊரின் அடையாளமாக மாறிப்போகிறது. ஊர் மீதும், மக்களின் மீதும் உள்ள அன்பினால், அவர் கடையில் சாப்பிடும் குழந்தைகளுக்கு உணவு இலவசம்.
பள்ளி விடுமுறை நாட்களில், அப்பா சிவநேசனுடன் இட்லி கடைக்கு சென்று வரும் முருகனுக்கு சமையல் கலை மீது ஆர்வம் ஏற்படுகிறது. அதனால், ‘கேட்டரிங்’ படித்து அதில் பட்டம் பெறுகிறார். பாங்காக்கில், மல்ட்டி மில்லியனர் விஷ்ணு வர்தன் (சத்யராஜ்) நடத்தி வரும் ஸ்டார் ஹோட்டலில் வேலைக்கு சேருகிறார். முருகனின் தனித்திறமையாலும், நிர்வாகத்தினாலும் லாபம் பன்மடங்கு உயருகிறது.
விஷ்ணு வர்தனின் மகள் மீரா (ஷாலினி பாண்டே), முருகனை விரும்புவதை அறிந்து, விஷ்ணு வர்தன் கல்யானத்திற்கு சம்மதிக்கிறார். பொறுப்பற்ற முறையில் நடந்து வரும் அஷ்வினுக்கு (அருண் விஜய்) இது பிடிக்காவிடாலும், தங்கை மீராவுக்காக அவரும் சம்மதிக்கிறார். உலகளவில், மிக பிரம்மாண்டமாக கல்யாணத்தை நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், முருகனின் அப்பா சிவநேசன் காலாமாகிறார். இறுதி சடங்குகளுக்காக சொந்த கிராமத்திற்கு வரும் முருகன் அங்கேயே தங்கிவிடுகிறார். கல்யாணம் நடக்காமல் போகிறது. அஷ்வின் கடும் கோபம் கொள்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், இட்லி கடை.
தனுஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இட்லி கடை. நேர்த்தியான திரைக்கதையுடன் கூடிய ஒரு ஃபேமிலி என்டெர்டெயினராக உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல கருத்தை, கொஞ்சம் கூட பிரச்சார தோரணை இல்லாமல் அனைவரும் விரும்பும் வண்ணம் கொடுத்திருப்பது, இயக்குநர் தனுஷின் சாமர்த்தியம். தனுஷ இயக்கத்தில் வெளிவந்துள்ள நான்காவது படமான இட்லி கடை படமும், தனித்துவமாக இருக்கிறது. சிவனேசன் நடத்தி வரும் இட்லி கடை போல், இன்னும் தமிழக மூலை முடுக்குகளில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மனைவி, மகன் மீது பாசம் கொண்ட சிவனேசன், கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், ராஜ்கிரண். வழக்கமான தனது பண்பட்ட நடிப்பினை வெளிப்படுத்தி, ரசிகர்களை உருக வைத்து விடுகிறார்.
ராஜ்கிரணின் மனைவி கதாபாத்திரத்தில், கீதா கைலாசமும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்.
முருகன் என்ற கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில், தனுஷ் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். ஷாலினி பாண்டேவின் காதலுக்காக, அருண் விஜய் செய்யும் அத்துனை கொடுமைகளையும் சமாளிக்கும் போதும், தந்தையின் கனவை பூர்த்தி செய்ய போராடும் போதும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். நித்யா மேனனுடனான காதல் காட்சிகளிலும், ரசிக்கும் வண்ணம் நடித்திருக்கிறார்.
ஈகோ பிடித்த கோடீஸ்வர இளைஞராக நடித்திருக்கும் அருண் விஜய், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நித்யா மேனன், ஷாலினி பான்டே இருவரும் கிடைத்த காட்சிகளில் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். கயல் கதாபாத்திரத்தில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் நடித்திருக்கிறார்.
பார்த்திபன், சமுத்திரக்கனி இளவரசு, பிரிகிடா, தமிழ் கௌதமன் போன்றோரும் காட்சிகளுக்கேற்ப நடித்துள்ளனர்.
கிரண் கெளஷிக் செட்டுக்குள்ளேயும், வெளியேயும் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார். அவருடைய ஒளிப்பதிவு, படத்திற்கு பிரம்மான்டம் சேர்த்திருக்கிறது.
ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை காட்சிகளுக்கேற்ப அமைந்திருக்கிறது. பாடல்கள், பழைய பாடல்களை நினைவூட்டுகிறது. ஆனால் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.
முகம் சுழிக்கும் காட்சிகளின்றி, குடும்பத்தினர் அனைவருடனும் பார்க்கும் வண்ணம், சுவாரசியமான, ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கிறது, இட்லி கடை.
இட்லி கடை – சிறந்த குடும்ப பொழுது போக்கு திரைப்படம்!