ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே படப்பிடிப்பு தளம் முழுக்க பிரமாண்டம் நிறைந்திருக்கிறது. இந்த படம் அதன் தனித்துவமான தலைப்பினாலும் மற்றும் அழகான நாயகன் ஹரீஷ் கல்யாண் நடிப்பதாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகளை இப்போதே ஏற்படுத்தியுள்ளது. மிகச்சரியான ஒரு முன் திட்டமிடலுடன் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் கருவை அடிப்படையாக கொண்டு மிக பிரமாண்டமாக உருவாகும் ஒரு பாடலை படம் பிடித்து வருகிறார்கள்.

இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறும்போது, “தனுசு ராசி நேயர்களே என்ற தலைப்பை குறிக்கும் வகையில் ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலை படத்தில் வைக்க நாங்கள் விரும்பினோம். இந்த படத்தின் ஹீரோ ஜாதகங்களில் மிகுந்த நம்பிக்கை உடையவர், அதன் அடிப்படையில் தான் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் முடிவெடுக்க விரும்புபவர். எனவே, இந்த கருத்துடன் தொடர்புடைய, கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லும் ஒரு பாடல் இந்த இடத்தில் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். அதற்கு ஏற்றவாறு கலை இயக்குனர் உமேஷ் புதுமையான முறையில் மிக பிரமாண்ட செட் அமைத்தார். இசையமைப்பாளர் ஜிப்ரான் சார், நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் போன்ற பிரபலங்களுடன் என் முதல் படத்திலேயே இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது. ஹரீஷ் கல்யாண் ஒரு அற்புதமாக நடனம் ஆடக் கூடியவர், 50 நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து மிகச்சிறப்பாக தனது பங்கை செய்திருக்கிறார். பாடல் நாங்கள் கற்பனை செய்ததை விட மிகவும் அழகாக வந்திருக்கிறது. எங்கள் சுய திருப்தியையும் தாண்டி, ஸ்ரீ கோகுலம் கோபாலன் சார் மிகவும் ஆதரவாகவும், முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.

ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் ஸ்ரீ கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த முழுநீள பொழுதுபோக்கு படத்தில் ரியா சக்ரவர்த்தி மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களின் முன்னிலையில் நடந்த இந்த படத்தின் துவக்க விழாவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பியார் பிரேமா காதலில் ஒரு ‘ரொமாண்டிக்’ ஹீரோவாகவும், ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்திலும் நடித்த ஹரீஷ் கல்யாண் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.