ஆர் ஜே பி, கேத்தி, செந்தில், பவுன்ராஜ், அனந்த் ராம், கலாவதி, சபி, ஜீவி, உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், திவ்யா. இத்திரைப்படத்தினை எழுதி, இயக்கித் தயாரித்திருக்கிறார், ஆர் ஜே பி. சங்கர் ராம் இசையமைத்திருக்க, ஒளிப்பதிவு செய்திருக்கிறார், செல்வகுமார்.
தமிழ் சினிமாவில், வழக்கமான பார்த்து, அலுத்து சலித்துப்போன ‘ஆணவக்கொலை’ பற்றிய கதை தான், ‘திவ்யா’ திரைப்படம். இத்திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை வைத்து பார்க்கும் போது மதுரை, உசிலம்பட்டியில் கதை நிகழ்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அநேக காட்சிகள் ‘PMT’ கல்லூரியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் இடம்பெறும் சம்பந்தப்பட்ட மக்களின் எந்த வாழ்வியல் குறித்த அறிதலும், புரிதலுமின்றி எடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதோடு, திவ்யா திரைப்பட குழுவிற்கு திரைப்பட ஆக்கம் பற்றிய தெளிவு, துளியும் இல்லை. என்பது, இன்னொரு சோகம்.
பறை அடித்து, அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொன்டு தனது தம்பி மற்றும் தாத்தாவுடன் வசித்து வருபவர், நாயகன் ஆர்.ஜே.பி. அவரும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகி கேத்தியும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் படித்து வருகிறார்கள். ஆர்ஜேபியின் ஏழ்மை சூழ்நிலையைக் கண்டு பரிதாபப்படும் திவ்யா, அவரை பறை அடிப்பதை விட்டு விட்டு, நன்கு படித்து வசதியான வாழ்க்கை வாழ, அறிவுறுத்துகிறார். நட்பாக பழகி வரும் இவர்கள் காதலில் விழுகிறார்கள். வழக்கம்போல் பெண் வீட்டினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், காதலர்கள் வீட்டை விட்டு ஓடுகின்றனர்ளதன் பிறகு போலீஸ், பஞ்சாயத்து. அதன் பிறகு கொலை. இது தான் படத்தின் மொத்தக்கதையும்.
சாதியை ஒழிப்பதற்கு, காதல் திருமணம் மட்டுமே சாத்தியம். என நம்பும் இயக்குநர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார், அய்யோ பாவம். என இயக்குநர் ஆர் ஜே பி மீது பரிதாபம் கொள்ள மட்டுமே முடிகிறது. அவரது திரையாக்கம் ஆள விடுறா சாமி! என சொல்ல வைக்கிறது. எத்தனையோ ஆணவக்கொலை படங்கள் வந்து விட்டன அதில், ஏதாவது ஒன்றை காப்பி அடித்து எடுத்தாவது கொடுத்திருக்கலாம்! இத்திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியைக்கூட ‘நல்லா இருக்கு’ என சொல்ல முடியவில்லை.
கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பி, கதையின் நாயகனாகவும் நடித்து, தனது சினிமா கனவை நிறைவேற்றி இருக்கிறார். அவ்வளவு தான். நாயகன், நாயகியாக நடித்திருக்கும் ஆர்.ஜே.பி, கேத்தி மற்றும் செந்தில், பவுன்ராஜ், அனந்த் ராம், கலாவதி, சபி, ஜீவி ஆகியோரது நடிப்பு ஓகே வாக இருக்கிறது.
சங்கர் ராம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் வெகு சுமார். செல்வகுமாரின் ஒளிப்பதிவும் சுமாராகவே இருக்கிறது.
‘திவ்யா’ – மனதில் பதியவில்லை!