5 ஸ்டார்’நிறுவனம் சார்பில் கதிரேசன் தயாரித்துள்ள படம் டைரி. இதில் அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, ஜெயப்பிரகாஷ், கிஷோர், சாம், ஷாரா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்கி இருக்கிறார், இன்னாசி பாண்டியன். இவர், இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவியாளர்..
பயிற்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள்நிதி. அவருக்கு ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. அதாவது, எந்த துப்பும் கிடைக்காத ஊட்டியில் 16 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு கொலை, கொள்ளை சம்பவம். அவரது வெற்றிகரமான புலன் விசாரணையில் குற்றவாளிகளை அவர் நெருங்கும் போது, அவரைச்சுற்றி சில அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கிறது. அதில் அவருடைய உயிருக்கு ஆபத்தும் ஏற்படுகிறது. அந்த அமானுஷ்யமான விஷ்யங்கள் என்ன? அவர் உயிர் பிழைத்தாரா? என்பதை சுவாரஷ்யமான கதையோடு, சுவாரஷ்யமற்ற திரைக்கதையில் சொல்லி இருக்கிறார், அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன்.
ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயம் செய்வதே அதில் நடிக்கும் நடிகர்கள் தான். இயக்குனர் அதை பற்றி பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. கதாநாயகன் அருள்நிதியை விட அதிக காட்சிகளில் வரும், நடிகர் ‘ஷாரா’ க்கு பதிலாக வேறு நடிகரை தேர்ந்தெடுத்து இருக்கலாம். படத்தின் பெரிய பலவீனமாக அவர் இருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் இன்னும் மோசம். பெரும்பாலான வசனங்கள் காட்சிகளுக்கு பொருந்தவில்லை.
பயிற்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக அருள்நிதி கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அமானுஷ்யமாக உணரும் காட்சிகளிலும், மற்றக் காட்சிகளிலும் தனது முகபாவனைகள் மூலம் கதாபாத்திரத்திற்கேற்ற கச்சிதமான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் பலமாக இருக்கிறார். பஸ்ஸில் நடக்கும் சண்டைக்காட்சி நன்றாக இருக்கிறது.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பவித்ரா மாரிமுத்து , கிஷோர், ஜெயப்பிரகாஷ், ‘நக்கலைட்ஸ்’ தனம், தணிகை, சதிஷ் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் இயக்குனரின் தேவைக்கேற்ப நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் பெரும்பாலான காட்சிகளை சிறப்பாக எடுத்து இருந்தாலும், க்ளைமாக்ஸில் பஸ் பாதாளத்தில் விழும் காட்சியை, சரியான கோணத்தில் காட்சிப்படுத்தாமல் விடப்பட்டதால் எந்தவிதமான பயமோ, படபடப்போ ஏற்படவில்லை.
இசையமைப்பாளர் ரோன் ஈத்தன் யோஹனின் பின்னணி இசை படத்திற்கு பெரிதாக பயன்படவில்லை.
கதை , திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கும் இன்னாசி பாண்டியன், காதல், அம்மா சென்டிமென்ட், அமானுஷ்யம், க்ரைம் என எல்லாவற்றையும் சொல்ல முயன்றிருக்கிறார்.. இதுவே திரைக்கதை குழப்பத்திற்கும், திரைக்கதை தடம் மாறியதற்கும் வழி வகுத்துவிட்டது. யூக்கிக்க முடியாத வித்தியாசமான கதையை சிந்தித்த இயக்குனர் இன்னாசி பாண்டியன், சிறந்த திரைக்கதையினை அமைக்காத்தால் ஒரு வெற்றிப் படத்தினை தவற விட்டுள்ளார்.