இயக்குனர் அமீர் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது…
தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து மதக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் ஓட்டுக்கள் பெறும் நோக்கத்தோடு, உலகெங்கும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முகம்மது நபி அவர்களை சொல்லத்தகாத வார்த்தைகளால் பொது வெளியில் கொச்சைப்படுத்திய கல்யாணராமன் என்னும் அயோக்கியனை கைது செய்த தமிழக அரசிற்கு என்னுடைய பாராட்டுக்கள்.
சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பொது வெளியில் உலவ விட்டு அதன் மூலம் ஏற்படும் கலவரத்தின் மூலம் தமிழகத்தில் ஓட்டு வேட்டை நடத்தலாம் என்கிற தீய எண்ணத்தோடு கல்யாணராமனையும் வேலூர் இப்ராஹிமையும் அழைத்துக்கொண்டு தமிழகத்தின் பல ஊர்களுக்கு பயணிக்கும் பாஜக கட்சியினரையும், தங்கள் கண் முன்னே தொடர்ந்து நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாதது போல் அமைதி காக்கின்ற வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களையும் நான் வண்மையாக கண்டிக்கிறேன்.
இந்த நேரத்தில் முகம்மது நபியின் மீது பேரன்பு கொண்ட சமூகத்தினர் பாசிச சக்திகள் தமிழகத்தில் எதிர்பார்க்கின்ற எதிர்வினைகளை ஆற்றாது அமைதியாகவும் ஒற்றுமையாகவும் அறிவுப் பூர்வமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் முகம்மது நபியின் தத்துவங்களையும் அவரின் சமூக செயல்பாட்டையும் மனித குலத்திற்கு அவர் ஆற்றிய பங்கையும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நினைவு படுத்துகிறேன்.
தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நாளை மறக்கடிக்கும் விதமாகவும் தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்ட கல்யாணராமனை கைது செய்தது போல் தேச விரோத மற்றும் சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபடும் வேலூர் இப்ராஹிமையும் கைது செய்து அவர்கள் இருவரின் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு இயக்குநர் அமீர் தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.