‘தேமுதிக’ தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக, உடல் நலம் குன்றிய நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னை திரும்பினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்தது.
தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக தொண்டர்களுக்கு, ‘தேமுதிக’ தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும், பூரண குணம் அடைந்தவுடன் தொண்டர்களை சந்திப்பாகவும் கூறியிருந்தார்.
அதனையடுத்து, இன்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார்.
இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 8.15 மணியளவில் விஜயகாந்த் காரில் வந்து இறங்கினார். பின்னர் காரிலிருந்து வீல் சேர் மூலம் அவருடைய உதவியாளர்கள் குமார், சோமு ஆகியோர் விமான நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.
விஜயகாந்த்துடன் அவருடைய மகனும், நடிகருமான சண்முகபாண்டியனும் சென்றுள்ளார்.
முன்னதாக அங்கே திரண்டிருந்த தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நலம் பெற வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.