‘டி என் ஏ’ (DNA) – விமர்சனம்!

‘ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம்’ சார்பில், தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்க, நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், ‘டி என் ஏ’ ( DNA). இதில் அதர்வா – நிமிஷா சஜயன், நாயகன் நாயகியாக நடித்திருக்க, அவர்களுடன் மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். ‘டி என் ஏ’ (DNA) திரைப்படத்தினை, ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காதலில் தோல்வியடைந்து, போதை பொருட்களுக்கு அடிமையான நாயகன் அதர்வா, மறுவாழ்வு மைய்யத்தின் மூலமாக குணமடைகிறார். இவருக்கு, சுயநிலையற்ற மனநிலை பாதிக்கப்பட்ட நாயகி நிமிஷா சஜயனை, திருமணம் செய்து வைக்கின்றனர். அவர்களுக்கு அரிதான, நல்ல ஜாதக கட்ட அமைப்புடன், ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. பிறந்த சில மணி நேரங்களில், சிகிச்சைக்கு எடுத்து செல்லப்பட்ட  அவர்களது குழந்தை மாறிவிட்டதாக, நிமிஷா சஜயன் குற்றம் சாட்டுகிறார். அதனை குடும்பத்தார் மறுக்கிறார்கள். அவரது மனநிலை மாற்றமே,  இந்த குற்றச்சாட்டுக்கு காரணம் என, மருத்துவமனை சார்பில் கூறப்படுகிறது.

அதர்வா மட்டுமே நிமிஷா சஜயன் சொல்வது உண்மை என நம்புகிறார். அதனால், போலீஸின் உதவியோடு குழந்தையைத் தேடி அதர்வா செல்கிறார். உண்மையிலேயே குழந்தை மாறியதா, என்ன நடந்தது? என்பது தான் ‘டி என் ஏ’ (DNA) படத்தின் மீதிக்கதை.

‘டி என் ஏ’ (DNA) திரைப்படத்தின், முதல் சுமார் 30 நிமிடக்காட்சிகள், சாராயம், சிகரெட், கஞ்சா  வியாபாரிகளுக்கு விளம்பரம் செய்வது போலவே காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காட்சிகளால் திரைக்கதைக்கு எந்த பிரயோஜனமும் இல்லை! ஒரு வேளை, இயக்குநருக்கு அந்த அயிட்டங்கள் பிடிக்குமோ? சரி, அத விட்ருவோம்.

நிமிஷா சஜயன் குழந்தை பெற்ற அந்தக்காட்சியிலிருந்து, திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது, க்ளைமாக்ஸ் வரை. பச்சிளங்குழந்தை கடத்தல். ஆண் குழந்தை என்றால் ஒரு தேவைக்ககவும், பெண்குழந்தை என்றால் ஒரு தேவைக்ககவும் கடத்தப்படும் தகவல்கள் பகீர் கிளப்புகிறது. போலீஸ் எஸ் ஐ, பாலாஜி சக்திவேலும், அதர்வாவும் குழந்தையை தேடி செல்லும் ஒவ்வொரு இடமும் வித்தியாசமான தனி உலகமாகவே இருக்கிறது. விறுவிறுப்பான இந்த திரைக்கதைக்கு, பார்த்திபன் ஒளிப்பதிவும், ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசையும் சிறப்பு சேர்த்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பினை பொறுத்தவரை முதலிடம் பிடித்திருப்பது நிமிஷா சஜயன் தான். அதன் பிறகு, அதர்வா மற்றும் பாலாஜி சக்திவேல். நிமிஷா சஜயனின் அம்மாவாக நடித்த விஜி சந்திரசேகரும் கவனம் பெறும் அளவில் நடித்திருக்கிறார்.

முதல் அரை மணி நேர தேவையற்ற காட்சிகளையும், நம்ப முடியாத காட்சிகளையும் நீக்கிவிட்டால் சிறப்பாக இருந்திருக்கும்!

டிஆக்ஸிரைபோஸ் (Deoxyribose) இல்லாத (DNA) ‘டி என் ஏ’