தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ‘யங் ஸ்டார் ‘ பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் , கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ்ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார்.
வரும் 21ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி 1.3 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் நிலையில், படத்தை மேலும் ரசிகர்களிடம் சென்றடையச் செய்யும் வகையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் வெளியீட்டிற்கு முன்னரான பிரத்யேக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்,
”இன்று நான் எந்த கெட்ட வார்த்தையையும் பேச மாட்டேன். ஒரு வருடம் வரை எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தயாரிப்பாளர் அகோரம் சார், அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மூவர் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா என இருவரும்.. அவர்கள் தயாரிக்கும் படங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் மேலும் தொடர்ந்து வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
பிரதீப், புரூஸ் லீ போன்றவர். அவர் இதுவரை ஆக்ஷன் படங்களில் நடிக்கவில்லை. ஒரு வேளை என்னுடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கலாம். நீண்ட நாள் கழித்து திரையுலகில் நான் ஒரு யங் ஸ்டாராக பிரதீப்பை பார்க்கிறேன். அவர் ஒரு பிரைட்டஸ்ட் ஸ்டார். அவர் இதற்காக கடுமையாக உழைக்கிறார், உழைத்து வருகிறார்.
இந்தப் படத்தில் நான் தான் அவருக்கு வில்லன். ஆனால் நல்ல வில்லன். படப்பிடிப்பு தளத்தில் நானும், அவனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் போது அவனுடைய அர்ப்பணிப்பை கவனித்து பிரமித்தேன். இயக்குநருக்கான நடிகராக இருக்கிறார். நானும் ஒரு இயக்குநர் என்பதால் இதனை என்னால் உறுதியாக கூற முடிகிறது. இதற்காக நான் அவரை மனதார பாராட்டுகிறேன். கேரக்டருக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிக்கும் போது அவரிடம் ஒரு தனித்துவமான உணர்வு வெளிப்படுகிறது. இது அவரை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவியும்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக உழைப்பவர். அவர் இயக்கிய இந்த படம் மிக எளிதாக பெரிய வெற்றியை பெறும். ஏனெனில் இந்தக் கால இளைஞர்களுக்கான ஒரு நீதியை அவர்கள் விரும்பும் ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். இது ஒரு எளிமையான கதை அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உந்துதலை வழங்கும் படமாக இருக்கிறது. இதற்காக அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்லூரியில் படிக்கும் இளைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவத்தின் மூலமாக விவரித்திருக்கிறார். சொன்ன விதமும் உற்சாகத்துடன் இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவரும் மிக திறமையான படைப்பாளி. இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,
”இது எனக்கு முதல் மேடை. சற்று பதற்றமாக இருக்கிறது. இந்த விழாவிற்காக நேரம் ஒதுக்கி வருகை தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து சிறிய வயதில் நடிகை ஸ்ரீதேவியின் நடனத்தாலும், நடிப்பாலும் ஈர்க்கப்பட்டு நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு, இன்று இந்த மேடையில் நிற்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சகோதரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் நாள் படப்பிடிப்பின் போது எனக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் சிறிய அளவில் தவறான புரிதல் இருந்தது. அவர் கடுமையான உழைப்பாளி. பொறுமை மிக்க இயக்குநர். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கான கேரக்டரை வடிவமைத்திருந்தார்.
பிரதீப் ஒரு இன்ட்ரோவர்ட் பர்சன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பழகும் போது தான் அவர் ஒரு கதாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முக ஆளுமை மிக்க திறமைசாலி என தெரியவந்தது. நட்புணர்வு மிக்கவர். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. தற்போது அவர் என்னுடைய இனிய நண்பராக மாறிவிட்டார். இதற்காகவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர்கள் ரவிக்குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாது. அவர்களின் இயக்கத்தில் நடிக்கவும் விரும்புகிறேன்.
தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். இதற்காக அவர்களுக்கு எப்போதும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 21ம் தேதி அன்று ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்கிறேன்,” என்றார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில்,
”உங்களில் ஒருவனை இந்த மேடையில் நிற்க வைத்ததற்காக நன்றி தெரிவிக்கிறேன். இந்த படம் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடனான என்னுடைய தொடர்பு தற்போது வணிக எல்லையை கடந்து நட்பாக மாறிவிட்டது. தயாரிப்பாளர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நன்றி.
கடினமாக உழைத்தால் வாழ்க்கை மாறும் என்பதற்கு இப்படத்தில் நடித்த விஜே சித்து ஒரு சிறந்த உதாரணம். ஹர்ஷத் கான் சிறந்த நடிகர். திறமைசாலி.
‘லவ் டுடே’ படத்தில் நான் நாயகனாக நடிக்கிறேன் என்றபோது என்னுடன் இணைந்து நடிக்க நடிகைகள் முன் வரவில்லை. என்னுடன் நடிப்பதை தவிர்க்க பல காரணங்களை சொன்னார்கள். சில நடிகைகள் மட்டும் தான் உங்களுடன் இணைந்து நடிக்க முடியாது, நான் உங்களை விட சற்று பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை தான் விரும்புகிறேன் என்று சொன்னார்கள்.
என்னுடைய நிலை இப்படி இருக்க.. இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது இயக்குநர் அஸ்வத், ‘உனக்கு ஜோடி அனுபமா பரமேஸ்வரன்’ என சொன்னார். அவர்கள் நடித்த பிரேமம் திரைப்படம் வெளியானபோது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் பாடிய அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன். அப்போது அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அனைவரிடமும் இயல்பாக பழகினார்கள். காட்சியிலும் அற்புதமாக நடித்தார்கள். அவர்களிடம் இருந்து அப்படி ஒரு நடிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கயாடு லோஹர் – தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை. படம் வெளியாவதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு வசனத்திற்கும், காட்சிகளுக்கும் ஒத்திகை பார்த்து, பயிற்சி எடுத்து, கடினமாக உழைக்கிறார்கள். அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
மிஷ்கின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் சந்திக்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு பரிசினை கொடுப்பார். என்னுடைய மேக்கப் உதவியாளருக்கு பிறந்தநாள் என்று கேள்விப்பட்டவுடன் தன் கையில் இருந்த கடிகாரத்தை பரிசாக அளித்து விட்டார். அவர் தான் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய கிஃப்ட். அவர் இந்தப் படத்தில் நடித்தது எங்களுக்கு மிகப்பெரிய கிஃப்ட்.
கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் மட்டுமல்ல. படப்பிடிப்பு தளத்திலும் மாஸாகவும், கிளாஸ் ஆகவும் இருக்கிறார். படத்தில் நடிக்கும் போது மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் அவர் பழகும் போதும் அவருடைய திரைப்படங்களின் நடிக்கும் ஹீரோவை போல் தான் ஸ்டைலிஷாக இருக்கிறார்.
கே .எஸ். ரவிக்குமார் – கோமாளி படத்தில் அவருடன் பணியாற்றும்போது எனக்குள் சற்று பயம் இருக்கும். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் எளிமையாகவும், இனிமையாகவும் பழகுவார். இது அவர் மீது எனக்கு இருந்த பயத்தை அகற்றி மரியாதையை உருவாக்கியது. அவரை எப்போது பார்த்தாலும் எனக்காக நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என நினைக்கும் தந்தையை போன்ற உணர்வு தான் எழும்.
ஜார்ஜ் மரியான் – திரையில் பார்ப்பது போல் அவர் அப்பாவித்தனமிக்கவர். படப்பிடிப்பு தளத்தில் சிறிய தவறு செய்தால் கூட அதற்காக வருந்துவார்.
இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சினேகா மேடம். படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிக்கும் போது அவரின் நடிப்பை ரசித்துக் கொண்டிருந்தேன்.படத்தில் பணியாற்றிய ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் .
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில்,
”இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்கள் படத்தில் பணியாற்றிய குழுவினரின் குடும்ப உறுப்பினர்கள் தான்.
முதலில் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சொன்ன கதையை நம்பி முதலீடு செய்து ‘டிராகன்’ படத்தை தயாரித்ததுடன் மட்டுமில்லாமல் அடுத்த படத்தை இயக்குவதிற்கான வாய்ப்பையும் வழங்கி இருக்கிறார்கள். விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. அவருடன் பேசும்போது உற்சாகமாக இருக்கும்.
படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் என என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தங்களின் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.
ப்ரதீப் ரங்கநாதன்- இவருக்காக தான் இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற தொடங்கினேன். வெற்றி என்றால் என்ன, என்று கண்டறிவது தான் இப்படத்தின் கதை. நாங்கள் இருவரும் கடுமையாக உழைத்து இந்த மேடையில் நிற்பதையும் வெற்றியாக கருதுகிறோம்.
ஆரம்பத்தில் அவர் ஒரு குறும்படத்தை இயக்கி அதை என்னிடம் காண்பித்தார். மூன்று நிமிட குடும்பத்தை அதனை இயக்கியவன் எப்படி திரைப்படத்தை இயக்குவான் என்று எண்ணினேன். ஆனால் ஆறு மாதம் கழித்து அவன் வளர்ந்து கொண்டு இருந்தான். அதை நான் கேட்டு என்னுடைய அறையில் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். என் வாழ்க்கையில் அன்பு என்ற ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அவர்தான் ‘உனக்கு பின்னால் வந்த அவன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறான். நீ இன்னும் காதல் …காதல் தோல்வி… என்று புலம்பிக்கொண்டு.. இங்கேயே உட்கார்ந்திருக்கிறாய் ‘ என உசுப்பேத்தினான். பிரதீப் படத்தை இயக்கியதால் தான் உத்வேகம் அடைந்து நானும் படத்தை இயக்குவதற்கான பணிகளில் தீவிரம் காட்டினேன். ‘போர் தொழில்’ எனும் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவும் பிரதீப் இயக்கிவிட்டாரே என்று எண்ணித்தான் அவனும் படத்தை இயக்கினான். அதனால் என்னை இயக்குநராக உருவாக்கியது பிரதீப் தான். ஆனால் இந்த மேடையில் நான் இயக்குநராகவும் ,அவர் நடிகராகவும் இருப்பது எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
‘லவ் டுடே’ படத்திற்கு முன் பிரதீப்பை உருவ கேலி செய்தவர்கள் எல்லாம் ‘டிராகன்’ படம் வெளியான பிறகு கொண்டாடுவார்கள். படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருபவர் பிரதீப் தான். ‘டிராகன்’ படம் திட்டமிட்டபடி நிறைவடைந்ததற்கு என்னை விட பிரதீப் போன்றவர்களின் நேரந்தவறாமையும் ஒரு காரணம். பிரதீப் உண்மையிலேயே சிறந்த நடிகர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பிரதீப்பின் நடிப்பு படம் வெளியான பிறகு நிச்சயமாக பேசப்படும்.
நான் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் ரசிகன் அல்ல. நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ரசிகன். அதனால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தால் தான் ஏராளமான புதுமுக இயக்குநர்கள் வித்தியாசமான கதைகளுடன் உன்னை நாடி வருவார்கள். படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் நன்றி,” என்றார்.