சின்மயி – ஷீலா முகத்திரையை கிழிப்பேன்! – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!

‘நேதாஜி புரொடக்ஷன்ஸ்’ சார்பில், சோலா. சக்ரவர்த்தி மற்றும்  ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில், மோகன் ஜி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘திரெளபதி 2’. இதில் ரிச்சர்ட் ரிஷி, ரக்‌ஷனா இந்துசூடன், நட்டி நடராஜ், Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல. ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா, அருணோதயன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிலிப் ஆர். சுந்தர் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், ஜிப்ரான் வைபோதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

அண்மையில் சென்சார் செய்யப்பட்ட இத்திரைப்படத்திற்கு, சென்சார் அதிகாரிகள் சில மாறுதல்களுக்கு பரிந்துரைத்து U/A சான்றிதழ் அளித்துள்ளனர். இம்மாதம், திரையரங்க வெளியீட்டிற்கு தயாராகி வரும் சூழலில், இயக்குநர் மோகன் ஜி ‘திரெளபதி 2’ குறித்து கூறியதாவது…

‘’‘திரெளபதி’ திரைப்படத்தின் தொடர்ச்சி தான் ‘திரெளபதி 2’. சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் சிற்றரசர்களாக இருந்து பேரரசர்களாக உருவெடுத்த போசாள மன்னர்கள், தமிழகத்தின் சில பகுதிகளில் ஆட்சி செய்தனர். அதே காலகட்டத்தில் இருந்த சுல்தான்களின் ஆட்சியையும், குறிப்பாக வரலாற்றில் நடந்த உண்மை சம்பவங்களே இப்படத்தின் கதை. 2025 லிருந்து 1400 ஆம்  ஆண்டிலிருந்து எப்படி செல்கிறது என்பது சுவாரசியமான திரைக்கதையால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பல்லவ பேரரசின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறோம். சுல்தான்களின் படையெடுப்பின் முக்கியமான நோக்கம் என்ன? என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாமே  நடந்த வரலாற்று பதிவிலிருந்து எடுத்திருக்கிறோம்.

சின்மயி பாடிய ‘எம்கோனே’ பாடல் படத்தில் இருக்கும். ஆனால், அவரது குரலில் இருக்காது.  சில நாட்களில், அந்த பாடலை வேறொரு பாடகி பாடி, பதிவு செய்யப்படவிருக்கிறது. இதுவரை மௌனம் காத்த நான், பாடகி சின்மயி, திரௌபதி கதாநாயகி நடிகை ஷீலா குறித்த உண்மைகளை விரைவில் பேசுவேன்.’’ என்றார்.