‘திரௌபதி’ எப்படியிருக்கு? – விமர்சனம்

அன்மையில் அரசியல் தலைவர்கள் ஆர்வமாக பார்க்க முன்வந்த படம் ‘திரௌபதி’. G.M பிலிம் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பலர் சேர்ந்து ஒரு குழுவாக (Crowd Funding Film) தயாரித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மோகன்.G.

ரிஷி ரிச்சர்ட், ருத்ர பிரபாகரனாகவும், ஷீலா ராஜ்குமார் திரௌபதியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன்  கருணாஸ், நிஷாந்த், சொந்தர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படம் எப்படி இருக்கிறது?

ரிச்சர்ட்டும் அவரது மனைவி ஷீலா ராஜ்குமாரும் சட்ட விரோதமாக நிலத்திலிருந்து தண்ணீர் எடுத்து விற்கும் அரசியல்வாதியை எதிர்க்கின்றனர். அதனால் அந்த அரசியல்வாதிக்கும் அவர்களுக்கும் ஏற்படும் மோதலில் என்ன நடக்கிறது என்பதை சற்று வித்தியாசமாக திரைக் கதையாக்கியிருக்கிறார், இயக்குனர் மோகன்.ஜி.

காதல் என்ற பெயரில் பித்தலாட்டம் செய்யும் கும்பலின் அடாவடித்தனங்கள் பகீர். சாதி என்ற போர்வையில் காசு பார்க்கும் சிலரை தோலுரிக்கிறது. திரௌபதி யார்? டீ விற்கும் ரிச்சர்ட்டின் பின்னணி தெரிய வரும் போது சுவாரஷ்யம். இருந்தாலும் திரைக்கதையை யூக்கிகமுடிகிறது.. இரண்டாம் பாதி நீளம் அதிகம்.

டீ விற்பவராக வரும் ரிச்சட்ட்டின் முகத்தில் எந்த பாவனையும் இல்லை. போதாக்குறைக்கு அவருடைய தாடியும் முகத்தை மறைத்துக் கொள்கிறது. ஆனால் முறுக்கு மீசையில் கம்பீரமாக இருக்கிறார்.

ஷீலா ராஜ்குமார் அம்சமாக இருக்கிறார். பெண்ணை மிரட்டி ஆபாச போட்டோ எடுக்கும் ஒருவனை நிர்வாணமாக்கி அதனை செல்போனில் படம்பிடிக்கும் காட்சியில் பெண்கள் பலமாக கைதட்டுகிறார்கள்.

குடிக்கிற காட்சி வைக்காமல் படமே எடுக்க முடியாது என்ற நிலையிலிருக்கும் பிரபல இயக்குனர்களுக்கு மத்தியில் குடிக்கும் காட்சி இல்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன்.ஜி.

எனினும் சொல்ல வந்ததை இன்னும் வலிமையாக சொல்லியிருந்தால் திரௌபதி ருத்ரதாண்டவம் ஆடியிருப்பாள்!