நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி நேற்று மாலை, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
‘வீர வல்லாள மகாராஜா’ புத்தகத்தின் எழுத்தாளர் ஆறு அண்ணல் கண்டார் பேசுகையில்,
“என் கனவை மோகன் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். மோகனைப் போன்ற தன்னம்பிக்கையான ஒருவரை நான் பார்த்தது கிடையாது. அருணாச்சல புராணம் என்ற சமஸ்கிருத நூலை எள்ளப்பநாதர் தமிழ்ப்படுத்தினார். அதில் ஒன்றுதான் வல்லாள மகாராஜாவின் சரிதம். அவரது ஆட்சியில் தர்மம் மேலோங்கி இருந்தது. இருந்தாலும் தனக்கு பின்னால் நாடு என்னவாகும் என சிவ பெருமானுக்கு மனக்குறை இருந்தது. இதனால் சிவனடியாராக பூமிக்கு வல்லாள மகாராஜாவிடம் வருகிறார். சிவனடியாரின் மனக்குறையை வல்லாள மகாராஜா தீர்த்து வைக்க அவருக்கே பிள்ளையாகிறார் சிவன். இந்தக் கதையை இன்னும் விரிவாக படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள்” என்றார்.
இயக்குநர் மோகன் ஜி பேசுகையில்,
“பீரியட் படம் இது என்பதால் முதல் படம் போலவே சின்சியராக வேலை பார்த்தேன். அதற்கு பெரும்பலமாக இருந்த தொழில்நுட்பக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. அவர்கள் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் 31 நாட்களுக்குள் படம் எடுப்பது சாத்தியமே இல்லை. ரிச்சர்ட் சார் இல்லாமல் ‘திரெளபதி2’ இல்லை. இந்தப் படத்திற்காக இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூட அவர் வாங்கவில்லை. குதிரை பயிற்சி, கத்தி சண்டை என ஒரு வருடமாக இந்தப் படத்திற்காக ஒரு நாளில் 16 மணி நேரம் உழைத்துள்ளார். நான் சொன்ன பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாய் போயிருந்தாலும் கதை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி. படத்தின் முக்கியமான நபர் ஒளிப்பதிவாளர் சுந்தர். நான் எதிர்பார்த்ததை போலவே சிறப்பான தரமான பணியைக் கொடுத்துள்ளார். அவருக்கு இணையான உழைப்பை கலை இயக்குநர் கொடுத்துள்ளார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றால் பலருக்கும் உந்துதலாக இருக்கும்.
25 ஹீரோயின்களை பார்த்த பிறகு ரக்ஷனாவை தேர்ந்தெடுத்தேன். மிகவும் தைரியமானவர். திறமையான நடிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பரணி அண்ணனுடன் முதல் படத்திலேயே வேலை செய்ய வேண்டியது. ஐந்தாவது படத்தில்தான் அது கைகூடியுள்ளது. அவர் பேசும் வசனம் படத்தில் முக்கியமானது. சிராக் ஜானி சார், தினேஷ் லம்பா சார் இரண்டு பேரும் மும்பையை சேர்ந்தவர்கள். இரண்டு பேரின் நடிப்பும் நிச்சயம் பேசப்படும். மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கும் தமிழ் தெரியாது என்றாலும் புரிந்து கொண்டு நடித்துள்ளனர். நட்டி அண்ணனுக்கு சிறப்பான உடல்மொழி உள்ளது. அவருடைய கரியரில் இந்த கதாபாத்திரம் நிச்சயம் மணிமகுடமாக இருக்கும். வேல ராமமூர்த்தி சாரின் நடிப்பும் குரலும் சிங்கம் கர்ஜிப்பதுபோல இருக்கும். தென்மாவட்டத்தை சார்ந்த நல்ல கதை அவரிடம் இருந்து எனக்கு வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

எழுத்தாளர் பத்மாவை பெண் சாண்டில்யன் என சொல்வார்கள். நிறைய புது தமிழ் வார்த்தைகளை இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அருமையான பல கதைகள் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் அவருக்கு உண்டு. அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலையால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு கதை எடுப்பதுதான் முதலில் எங்கள் திட்டம். அந்த சமயத்தில் காசி சென்றிருந்தேன். நான் சிவபக்தர். அங்கு ஒரு கோயிலுக்கு சென்றபோது அங்கிருந்த நந்தி, நம் இஸ்லாமிய மக்கள் வழிபடும் ஞானவாபி மசூதியை பார்த்தார்போல இருந்தது. அதை பற்றி விசாரித்தபோது ஒளரெங்கசீப் அங்கிருந்த கோயிலை நோக்கி மசூதி உருவாக்கிய வரலாறு தெரியவந்தது. அது தமிழ்நாட்டுடனும் கனெக்ட் ஆகிறது. அதைப்பற்றி விரிவாக படித்தவுடன் இதுதான் நான் பண்ண வேண்டிய படம் என முடிவு செய்தேன். ’சாவா’ படம் பார்த்தபிறகு என் நம்பிக்கை இன்னும் அதிகமானது. ஜிப்ரான் சார் இந்தப் படத்திற்குள் வந்ததும் இந்தப் படம் இன்னும் பெரியதானது. எம் கோனே பாடல் இப்போது பத்மலதா மேடம் குரலில்தான் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அவருக்கு நன்றி. பல இடங்களில் அவரது இசை உணர்வுப்பூர்வமாக உள்ளது.
நம்முடன் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்திய இஸ்லாமியர்களை இந்தப் படம் எந்தவகையிலும் காயப்படுத்தவில்லை. அவர்களின் தொடக்கம் எது என்று இந்தப் படம் புரிய வைக்கும். மற்றபடி கமர்ஷியலான படம்தான் இது. வீரபாண்டிய கட்டபொம்பன், சிறை, மதரசாப்பட்டிணம் போன்ற படங்களில் பிரிட்டிஷ்காரர்களை காட்டும்போது மத, அடையாளங்கள் இல்லாமல் அவர்களை பிரிட்டிஷ்காரர்களாக மட்டுமே எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல இந்தப் படத்தை துருக்கியில் இருந்து நம் நாட்டை கைப்பற்ற வந்த அந்நியர்களாக எண்ணிதான் கதையை நான் எழுதியுள்ளேன். அவர்களின் வாழ்க்கையை மத அடையாளங்களோடு தொடர்புபடுத்தி பார்க்காதீர்கள். இந்த நாட்டை அடிமைப்படுத்த துருக்கியில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் பற்றிய கதை. மூன்று வில்லன்கள் படத்தில் உள்ளனர். ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நல்லபடியாக பொங்கலுக்கு படம் வெளியாகிறது. என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு இதுவரை நஷ்டம் வந்ததில்லை. வீர வல்லாள மகாராஜா வரலாற்றை வெளியே கொண்டு வருவது எனக்கு பெருமை. உங்கள் அனைவரையும் ‘திரெளபதி2’ திருப்திப்படுத்தும்” என்றார்.