நட்டி நடராஜ், ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன் , ஒய். ஜி. மகேந்திரன், வேலராமமூர்த்தி, தேவயானி சர்மா , பரணி, திவி , சரவண சுப்பையா, அருணோதயன், லட்சுமணன், சிராக் ஜானி , தினேஷ் லம்பா உள்ளிட்ட பலரது நடிப்ப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம் திரௌபதி 2. இத்திரைப்படத்தை ‘நேதாஜி புரொடெக்ஷன்’ சார்பில், சோலா. சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். ‘திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா வரலாறு’ என்ற நூலை தழுவி கதை எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் மோகன் G. இசை, ஜிப்ரான். ஒளிப்பதிவு, பிலிப்ராஜ் சுந்தர்.
திரௌபதி 2 திரைப்படத்தில், இந்தியா மீது துக்ளக் வம்சத்தின் படையெடுப்பினையும், அவர்களை எதிர்த்து திருவண்ணாமலையை ஆட்சி செய்த ஹொய்சாளர் மன்னர்களைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, துக்ளக் மன்னர்களின் படையெடுப்பின் போது மதமாற்றம் நடந்தததையும், கோயில் சிலைகள் அழிக்கப்பட்டதையும், அதன் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, வக்ஃப் போர்டுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
ரிச்சர்ட் ரிஷி வசிக்கும் ஊரில், பலரது நிலங்களை வக்ஃப் போர்டு சொந்தம் கொண்டாடுவதாக நடக்கும் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தை தலைமை ஏற்கிறார், ரிச்சர்ட் ரிஷி. இது அனைத்து மீடியாக்களிலும் பேசப்படுகிறது. இந்த சம்பவத்தை பார்க்கும் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இந்தியர், அந்த ஊரில் இருக்கும் ஒரு கோவிலை புணரமைக்க விரும்புகிறார். அதனால், தன்னுடைய மகள் ரக்ஷனா இந்துசூடனை அந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அந்த கோவில், ரிச்சர்ட் ரிஷியின் வழிகாட்டுதலின் படி புணரமைக்க திட்டமிடப்படுகிறது.
அந்த கோவிலுக்கு செல்லும் ரக்ஷனா இந்துசூடனுக்கு தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வருகிறது. அதில் ரிச்சர்ட் ரிஷியும், ரக்ஷனா இந்துசூடனும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். 14ஆம் நூற்றாண்டுகளில் டெல்லியை ஆட்சி செய்துவரும் முகம்மது பின் துக்ளக்கை எதிர்த்து போரிடுகின்றனர். அப்போது என்ன நடந்தது? மறு ஜென்மம் எடுத்தது ஏன்? என சொல்வதே திரௌபதி 2 திரைப்படத்தின் மொத்தக்கதையும்.

இந்தியாவில் ஆட்சி செய்த துக்ளக் வம்சம், முஸ்லீம் அல்லாதவர்கள் மீது நடத்தப்பட்ட அத்து மீறல்களையும் ,பெண்கள் மீது நடத்தப்பட்ட பலாத்கார துன்புறுத்தல்கள். ஆண்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத்தாக்குதல்கள் என மக்கள் கொடுமைப் பட்ட கொடூரங்களை படமாக்கிய விதம் பதைபதைக்கிறது. கட்டாய மதமாற்றமும் பகீர் கிளப்புகிறது.
துக்ளக்கின் அந்த கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போரிட்ட திருவண்ணாமலைப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் வீர வல்லாளர், வீரசிம்ம காடவராயர் போன்றவர்களின் செயலும், தியாகமும் ஈடு இணையற்றது. வீரவல்லாளர் கதாபாத்திரத்தில் நடித்த நட்டி நடராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்ப்பது போல் நடித்திருக்கிறார்.
வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சர்ட்டின் நடிப்பு, ரசிக்கும்படி இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் தனிக்கவனம் பெறுகிறார். திரௌபதி கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடனின் வசீகரமான தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிடுகிறது.
துக்ளக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிராக் ஜானி, மதுரை தம்பானியாக நடித்திருக்கும் தினேஷ் லம்பா உள்ளிட்டோர் கொடூரமானவர்களாக நடித்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்கள்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வசிக்கும் ராம்நாமி, பழங்குடி இனத்தவராக ஒய்.ஜி. மகேந்திரன் சில காட்சிகல் மற்றும் ஒரு பாட்டில் நடித்து, கவனம் ஈர்க்கிறார். அவரோடு பயணிக்கும் பரணி, மற்ற கதாபாத்திரங்களில் நடித்த வேல. ராமமூர்த்தி, தேவயானி சர்மா , திவி , சரவண சுப்பையா, அருணோதயன், லட்சுமணன் ஆகியோரும் கவனம் பெறுகிறார்கள்.
படம்பிடிக்கப்பட்ட லெகேஷன்கள் , கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்பங்களும் பெரிதாக குறை சொல்லும்படி இல்லை. உடைகள் வடிவமைப்பு, அரங்க வடிவமைப்புகளும் சிறப்பாகவே இருக்கிறது. ஜிப்ரானின் இசையும், பாடல்களும் படத்தின் பெரும்பலமாக இருக்கிறது. அது போலவே பிலிப்ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவும் சிறப்பு.
ஆங்காங்கே சில குறைகளும் இருக்கிறது. வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்தவைகள் ஓரே காலத்தில் நடந்தவைகளாக சித்தரிப்பது படத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குரியதாக்குகிறது. திரைக்கதையில் சுவாரசியத்திற்கும் பரபரப்பிற்கும் இடமிருந்தும் அது சரியாக மேற்கொள்ளப்படவில்லை. மற்றபடி வரலாற்று சம்பவம் சில புனைவுகளோடு சித்தரிக்கப்பட்டிருக்கிறது.