‘ட்ரீம் கேர்ள்’ –   விமர்சனம்!

‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படத்தினை ‘சாருலதா பிலிம்ஸ்’ சார்பில், எம். ஆர் .பாரதி தயாரித்து, கதை எழுதி இயக்கியிருக்கிறார். இணை இயக்கம் எம்.பொன் புவனேஸ்வரன். திரைக்கதை எம்.டி. தமிழரசன் கிருத்திகா தாஸ், என். காவேரி மாணிக்கம், டாக்டர் ஆர். குணசேகரன், B. ஆதித்யன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜீவா நாயகனாக நடித்திருக்க, நாயகியாக  ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். இவர்களுடன்  பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்திருக்கிறார், சாலமன் போவாஸ். இசையமைத்திருக்கிறார் இளமாறன்.

திரைப்பட இயக்குநராக வரவேண்டும் என்ற ஆசையோடு இருப்பவர், நாயகன் ஜீவா. இவரைப் போலவே திரைப்பட பின்னணி பாடகியாக வர ஆசைப்படுபவர் நாயகி ஹரிஷ்மிதா. ஜீவாவிற்கு தயாரிப்பாளர் கிடைத்து விடுகிறது. இயக்குவதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்த  சூழலில், தனது கனவில் வந்த கதாநாயகியைப் போல் ஒருவரைத் தேடி வருகிறார். ஒரு நாள், பாடகியாக ஆசைப்பட்ட ஹரிஷ்மிதாவின் போட்டோவை பார்த்தவுடன் அதிசயித்து போகிறார். காரணம், கனவில் வந்த தோற்றத்திலேயே அவர் இருப்பதால். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வந்த நிலையில், இவர்களுக்குள் காதலும் வளர்கிறது. திடீரென ஒரு நாள் ஹரிஷ்மிதாவை, ஜீவா தவிர்க்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது? என்பது தான், ‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் கதை.

ஒரு காதலுக்கு கனவு வில்லனாக இருக்கமுடியுமா? முடியும். என்பதன் திரைக்கதையாக உருவாகியிருப்பது தான், இந்த ட்ரீம்கேர்ள் திரைப்படம். வித்தியாசமான யோசனையை முடிந்தளவு, மசாலாத்தனம் இலாமல் படமாக்கியிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவை பாராட்டலாம்.

குளு குளு ஊட்டி தான் கதை நிகழும் இடம். காதலர்கள் சுற்றி வரும் இடங்களை அழகாக படம்பிடித்து, ஊட்டிக்குள் இருப்பதைப்போலவே ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் சாலமன் போவாஸ்.

ஒளிப்பதிவாளரின் காட்சிகளை கெடுக்காத வகையில், இளமாறனின் இசை அமைந்திருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் ஜீவாவும், நாயகியாக நடித்திருக்கும் ஹரிஷ்மிதாவும் இளைமை துடிப்புடன் வலம் வருகிறார்கள். அவர்களுக்கிடையே நிகழ்ந்த நெருக்கமான காட்சிகள் உண்மையிலேயே இவர்கள் காதலர்களா? என கேட்க வைக்கின்றன. இருவருக்கும் இது முதல் படம் என சொல்லப்படுகிறது. தடுமாற்றமில்லாமல் நடித்திருக்கின்றனர். இயக்குநர் இவர்களை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்! இவர்களோடு நடித்த சித்து, பிரபு, இந்திரா, துருவன் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

நாவலைப் படிப்பது போன்ற உணர்வும், திரைக்கதையில் சுவாரசியம் குறைவாக இருப்பதைப்போன்ற உணர்வும் ஏற்படுகிறது. அதை சரி செய்திருந்தால், இது எல்லோருக்குமான ஒரு நல்ல ரொமேன்ஸ் டிராமவாக இருந்திருக்கும்.

‘ட்ரீம் கேர்ள்’  – நாவல்!