இ.பி.கோ 306 விமர்சனம் ( விளம்பரம் அல்ல )
அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர், மாணவி அனிதா. தமிழ் வழி பயின்ற இவர் பள்ளி இறுதியாண்டு ( பிளஸ் 2 ) தேர்வில், 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். மருத்துவம் படிக்கவேண்டும் என்பது அவரது கனவு. அதற்கான 196.5 கட் ஆப் மதிப்பெண்களையும் பெற்றிருந்ததால், மருத்துவ கல்லூரியில் இடம் நிச்சயமாக கிடைத்துவிடும் என்று நம்பினார்.
ஆனால், மத்திய அரசு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவர் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்து விட்டது. மாணவி அனிதா, அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றார். நீட் தேர்வு முறையை எதிர்த்து போராடிய அவருக்கு தோல்வியே மிஞ்சியது.
வாழ்க்கையை வெறுத்த மாணவி அனிதா, விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி எடுத்தது. மருத்துவம் படிக்க ஆசை பட்ட மாணவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ் ஆப்பிலும் வழக்கம்போல் வாய்ச்சொல் வீரர்கள் முழக்கமிட்டு அடங்கிப் போனார்கள். மக்களும் மறந்துபோனார்கள்.
இந்த சம்பவத்தைக் கொண்டு ‘இ.பி.கோ 306’. என்ற படம் உருவாகியுள்ளது. சாய் பிலிம்ஸ் சார்பில் சிவக்குமார், தயாரித்துள்ளார். இயக்கியிருக்கிறார், சாய். தாரா பழனிவேல், சீனுமோகன், சாய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
நீட் தேர்வினால் கிடைக்கும் பலன் என்ன? என்பதை, வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது, ‘இ.பி.கோ 306’.
கோடீஸ்வரியாக நடித்திருக்கும் தாரா பழனிவேல், கதாப்பாத்திரத்திற்கு பொருத்தம். அவருக்கு அப்பாவாக நடித்திருக்கும் சீனு மோகன் வெகு பொருத்தம்.
அரசியல் தலைவராக நடித்திருக்கும் சாய், ஒருவரை ஞாபகப் படுத்துவது போலிருக்கிறது. அவர் பேசும் வசனங்கள் பல, அதிர்ச்சியடையச் செய்கிறது.
டெக்னிக்கல், திரைக்கதை உள்ளிட்ட பல விஷயங்கள் படுசுமார். கிடைத்தை வைத்து ‘இ.பி.கோ 306’ படத்தை எடுத்திருக்கிறார்கள். சொல்ல நினைத்ததை தைரியமாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் சாய்.
லாபமே வேண்டாம். ஆனால், மக்களுக்கு ஒரு கருத்தை சொல்லியே ஆக வேண்டும். என நினைத்து எடுத்துள்ள படம் தான், ‘இ.பி.கோ 306’
பாராட்டலாம்.