ஈஸ்வரன் – விமர்சனம் – ( விளம்பரம் அல்ல )
பாண்டிய நாடு படத்திற்கு பிறகு தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த இயக்குனர் சுசீந்திரனும், சிலம்பரசனும் இணைந்துள்ள படம், ‘ஈஸ்வரன்’. கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படம் எப்படி இருக்கிறது. பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய வசதியுடன் வாழ்ந்து வருபவர் பாரதிராஜா. சொந்தங்கள் இருந்தும் தனிமையில் இருக்கிறார். அவருக்கு பாதுகாவலராக சிலம்பரசன்.
பொதுமுடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வரும் பாரதிராஜாவின் சொந்த, பந்தங்களை கூண்டோடு ஒழித்துக்கட்ட வில்லன் சதி செய்கிறார். ஏன்? எதற்கு? சிலம்பரசன் யார்? என்பது தான் ‘ஈஸ்வரன்’ படத்தின் கதை.
தீர்க்க முடியாத சிக்கலான ஒரு பிரச்சனை இருந்து, அதை ஹீரோ தீர்த்து வைத்தால், அதில் சுவாரஷ்யமிருக்கும். ஆனால், இந்தப்படத்தில் அப்படி எதுவும் இல்லை. சொல்லப்படும் காரணங்களும் பெரிதாக இல்லை என்பதால் சுவாரஷ்யம் குறைவு.
சிலம்பரசனுக்கும், நிதி அகர்வாலுக்கும் இடையிலான காதல் காட்சிகளில் எந்த ஈர்ப்புமே இல்லை. நந்திதா ஸ்வேதாவும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார். சிலம்பரசனை காதலிப்பதற்கு நிதி அகர்வால் சொல்லும் காரணம், அய்யோ…அய்யோ… நியாயமா இயக்குனரே? காட்சிகளையும், திரைக்கதையினையும் இன்னும் சரியாக வடிவமைத்திருக்கலாம். ( வாங்கின காசுக்கு கொஞ்சமாவது வேலை செஞ்சிருக்கலாமோ!)
ஒரு சில சென்டிமென்ட் காட்சிகளும், பாலசரவணின் காமெடிகளும் மட்டுமே படத்தில் உருப்படி. சிலம்பரசனின் உழைப்பு வீண். அவருடைய புதிய ‘லுக்’ நன்றாக இருக்கிறது.
க்ளைமாக்ஸில் சம்பந்தமே இல்லாமல் ‘அசுரனு’க்கு எதற்கு எச்சரிக்கை! டைரக்டர்ஸ், ஹீரோக்களுக்கு ‘ஈகோ மசாசஜ்’ செய்தே அவர்களை காலி செய்து விடுவார்கள். ஹீரோக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எஸ்.தமனின் இசையில் ஒரு பாடல் மட்டும் சிறப்பு. பல இடங்களில் மியூஸிக், டையலாக்ஸூகளை ஓவர் லாப் செய்கிறது.
விளம்பர இடைவெளியில்லாமல் ஒரு தொலைக்காட்சித் தொடரை பார்த்த உணர்வை தருகிறது, ஈஸ்வரன்.