ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ . இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பாக்யராஜ், அமீர் உள்ளிட்ட அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் கே.பாக்யராஜ் இசை தகட்டை வெளியிட்டார்.
‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதாவது..
‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கறவன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது.
இப்ராஹிம் ராவுத்தர் நல்ல பெயர் சொல்லும் படங்கள் எடுத்தார். அவர் பெயரை சொல்லும் அளவிற்கு அவர் மகன் முகமது அபுபக்கர் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழில் இனிமையாக பேசிய கதாநாயகிக்கு வாழ்த்துக்கள்.’ என்றார்.
இயக்குநர் அமீர் பேசும்போது,
‘என்னுடைய வாழ்வில் கேட்டுப் பெறக் கூடாத விஷயங்கள் மூன்று வைத்திருக்கிறேன். கைத்தட்டல், வாழ்த்து மற்றும் நன்றி, கைத்தட்டுங்கள் என்று கேட்பதில் கூச்சப்படுவேன். நாம் பேசுவது நன்றாக இருந்தால் கைத்தட்டல் தானாக வரும்.
இயக்குநர் கவிராஜ் கூறியது போல நானும் 17 வருடங்களுக்கு முன்பு கமலஹாசன் மற்றும் பாரதிராஜா அவர்களை நான் அழைத்து அவர்கள் வந்ததில் பெருமையடைந்தேன்.
நான் இந்த விழாவிற்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் தான். ஒன்று ஆரியின் வற்புறுத்தல், இரண்டாவது ‘ராவுத்தர் பிலிம்ஸ்’. அதுமட்டுமில்லாமல், நான் வந்தால் என் மூலம் இந்த படத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடும், தரமான படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் தான் வந்தேன். என்னைப் பொருத்தவரை திரைத்துறையில் புகழ் நிரந்தரமில்லை.
இப்ராஹிம் ராவுத்தர் மிக எளிமையான மனிதர். அவர் இன்று இருந்திருந்தால் இந்த அரங்கத்தில் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்திருப்பார்கள். மேடை நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கிறது. விஜயகாந்திற்கு ‘கேப்டன்’ என்று பெயர் வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை செதுக்கியவர் ராவுத்தர். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள்? சினிமா அவர்களைப் பிரித்து விடும். அதேபோல் தான் நானும் பாலாவும். திரைத்துறையில் நன்றி என்பது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது ஊசி அளவு தான் இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்.
மேலும், ஜீவி இல்லாத சினிமா என்பதே இல்லை என்று ஒரு காலம் இருந்தது. அப்படிப்பட்ட அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்டார். அதுதான் சினிமா.
சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா? நட்சத்திரம் என்பது மின்னி மறைவது, அதுபோல தான் சினிமாக்காரர்களும். ஆகவே, புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், வெற்றியடைந்தபின் மற்றவர்களையும் கைத்தூக்கி விடுங்கள். நீங்கள் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் போதே உங்களுடன் பயணித்தவர்களை உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும்.
எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியைப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது என்றார்.