ராகினி திவேதி நடிக்கும் ‘ஈமெயில்’

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ளவருமான ராகினி திவேதி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக முருகா அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி உள்ளது.அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரௌபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார்.

கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் மாதப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

கதாநாயகிக்கு திடீரென ஒரு ஈமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக சொல்லப்பட, அந்த விளையாட்டிற்குள் இறங்கிய கதாநாயகி எதிர்பாராத விதமாக ஒரு மாஃபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார். இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.  சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளார்கள்.

இந்த படம் குறித்தும் படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் ரிலீஸ் குறித்தும் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எஸ்.ஆர் ராஜன் கூறும்போது,

“ஒரு பிசினஸ்மேனாக இருந்துகொண்டு படம் தயாரிக்கும் ஆர்வத்தில் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் இங்குள்ள சூழ்நிலை என்னை ஒரு இயக்குநராகவே மாற்றி விட்டது. என்னாலும் முடியும் என்கிற வெறியுடன் கதை மீதுள்ள நம்பிக்கையில் இந்த படத்தை இயக்கியுள்ளேன். ஆரம்பத்தில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் நான் புதியவன் என்பதால் கொஞ்சம் சிரமங்களைக் கொடுத்தனர். அதேசமயம் படப்பிடிப்பில் நான் இந்த படத்தை உருவாக்குவதைப் பார்த்து போகப்போக அவர்களே எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்கினர்.

கதாநாயகியை மையப்படுத்திய இந்த படத்தின் கதையை பல முன்னணி நடிகைகளிடம் கூறினேன். ஆனால் அவர்கள் யாருமே கதை கேட்க கூட முன்வரவில்லை. அதே சமயம் நடிகை ராகினி திவேதி மிகப்பெரிய மனதுடன் கதை கேட்க ஒப்புக்கொண்டார். கதையைக் கேட்டு முடித்ததும் சில நாட்கள் கழித்து அழைத்து நீங்கள் கூறிய கதையை அப்படியே படமாக எடுப்பீர்களா என்று மட்டும் கேட்டார். அவர் எதிர்பார்த்தபடியே அவரிடம் சொன்ன கதையை அப்படியே படமாக்கி இருக்கிறேன்.

இடையில் படப்பிடிப்பு சமயத்தில் வெவ்வேறு விதமான பிரச்சனைகளும் இடைஞ்சல்களும் ஏற்பட்டன. இந்த படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மைசூர், கேரளா, கோவா மற்றும் மும்பை என பல இடங்களில் நடத்தினோம்.

மொத்தம் 56 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் பாண்டிச்சேரியில் 3 நாட்களும் கோவாவில் 7 நாட்களும் மிகப்பெரிய மழை பெய்து எங்களை ஷூட் செய்யவிடாமல் தடுத்தது. இதனால் கால்ஷீட் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அந்த சமயத்தில் கிக், போலோ சங்கர் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வந்த ராகினி திவேதி எங்கள் மீது உள்ள நம்பிக்கையால் மீண்டும் எங்களுக்கு தேவைப்பட்ட கால்ஷீட்டை கொடுத்து உதவி நடித்தார்.

ஒரு சண்டைக்காட்சியின் போது பாம் பிளாஸ்ட் நடைபெற்று கதாநாயகியின் காலில் ஆறு தையல் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் கன்னட திரை உலகினர் சிலர் திரண்டு வந்து பிரச்சனை உருவாவது போன்ற சூழலில் நடிகை ராகினி திவேதி தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார். அதேபோல முருகா அசோக் குமாரும் காதில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தையல் போட்டு அப்படியே படப்பிடிப்புக்கு திரும்பி மூன்று நாட்கள் இடைவிடாமல் நடித்துக் கொடுத்துவிட்டுத் தான் கிளம்பிச் சென்றார்.

இந்த படத்தில் மனோபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கான இரண்டே காட்சிகள் மட்டும் படப்பிடிப்பு நடக்க வேண்டிய நிலையில் தான் உடல்நிலை சரியில்லை எனக் கூறி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார். அதன்பிறகு அவர் உடல் நிலை உடல்நலக் குறைவு காரணமாக எதிர்பாராத விதமாக காலம் ஆகிவிட்டார்.  ஆனால் அதற்கு முன்பாகவே அவர் நடித்த காட்சிகளுக்கு அவரையே டப்பிங் பேச வைத்து நிறைவு செய்து விட்டேன். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழிகளிலும் இந்தப்படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் படம் இருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘இனி உத்திரம்’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார் இயக்குநர் எஸ்.ஆர் ராஜன். இதில்  நடிக்க முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தையில் உள்ளோம்., வரும் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என தனது அடுத்த படத்திற்கான முக்கிய தகவல்களையும் அறிவித்துள்ளார் இயக்குநர் எஸ்.ஆர். ராஜன்.