‘எப்போதும் ராஜா – பாகம் 1’. – விமர்சனம்!

ஒரு திரைப்படத்தை எடுத்து வெளியிடுவதற்குள், இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கனுமான்னு சொல்லி பாதிப்பேர், ஓடியே போயிடுவாங்க. இந்த நிலையில், வின் ஸ்டார் விஜய்ன்னு ஒருத்தர், 10 வருட தொடர் முயற்சிக்கு பிறகு, கதை, திரைக்கதை எழுதி இயக்கி, தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

அண்ணன், தம்பி என இரட்டை கதாபாத்திரங்களில் ஒருவர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், இன்னொருத்தர் வாலிபால் விளையாட்டு வீராகவும் நடித்துள்ளனர். இவர்களுக்கு ஜோடியாக, டெப்லினா மற்றும் ப்ரியா நடித்துள்ளனர். வில்லியாக கும்தாஜ் நடித்துள்ளார்.

அண்ணன் விஜய், நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர், தம்பி துடிப்பான வாலிபால் விளையாட்டு வீரர். இவர்கள் இருவருக்கும் தொழில் முறையில், ஏகப்பட்ட இடைஞ்சல்கள். ஒரு கட்டத்தில் இருவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்திலிருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா? என்பது தான், ‘எப்போது ராஜா – பாகம் 1’ன் கதை.

முதல் படத்திலேயே, இரட்டை வேடங்களில் நடித்திருக்கு, வின் ஸ்டார் விஜய், காதலியுடன் ஆட்டம், பாட்டம், கொண்ட்டாட்டம், வில்லன்களுடன் அதிரடி சண்டை,  என அனைத்து ஏரியாக்களிலும், வலம் வருகிறார். நான் நடிக்கிறது தான் நடிப்பு, நாங்கள் எடுத்திருப்பது தான் படம். என எதைபற்றியும் கவலைப்படாமல் இஷ்டத்திற்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.

நாயகிகளாக நடித்திருக்கும் டெப்ளினா, பிரியா, வில்லியாக நடித்திருக்கும் கும்தாஜ் ஆகியோர் இயக்குனரின் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள். இவர்களில், கும்தாஜ் கவர்ச்சியில் கொஞ்சம் தூக்கலாகவே நடித்திருக்கிறார்.

ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார் ஆகியோர் வந்து போகிறார்கள்.

இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் இயக்குனர் சொல்படி கேட்டமாதிரியும் தெரியவில்லை. சினிமாவுக்கான இலக்கணத்தை பின்பற்றிய மாதிரியும் தெரியவில்லை! எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தங்களுக்கு தோன்றியதை செய்திருக்கிறார்கள்.

அதேபோல், எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் நாயகன் வின் ஸ்டார் விஜய், ஒரு திரைப்படத்தை, நேர்த்தியற்ற முறையில்,  எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். என்பதற்கான, உதாரணமாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்!

தேர்வுக்கான பேப்பரில், ஏதாவது எழுதியிருந்தால் திருத்தலாம். எதுவுமே எழுதாமல், வெறும் பேப்பராக இருந்தால் எப்படி திருத்துவது. அப்படித்தான், இருக்கிறது. ‘எப்போதும் ராஜா பாகம்1’ திரைப்படமும்!