தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய திமுக ஆட்சி, மக்களாலும், அரசியல் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
எடப்பாடி.பழனிச்சாமி, தலைமையிலான கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்த தொடர் ஊழல் புகார்கள், குற்றச்சாட்டுக்கள் அதனை தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைகள் என தமிழக அரசியல் களம் பரப்பரப்பாகி வருகிறது.
இந்நிலையில் அரசியலிலிருந்து விலகியிருப்பதாகக்கூறிய சசிகலா மீண்டும் அதிமுக தொண்டர்களிடம் பேசிவரும் ஆடியோ பதிவு, அதனை தொடரும் பதவி நீக்கம் என அவரின் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி வருகிறது.
மேலும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை சந்திக்க எடப்பாடி.பழனிச்சாமி சென்றார். அதே நேரத்திலேயே சசிகலாவும் மதுசூதனனை சந்திக்கச் சென்றார்.
இது அதிமுக வின் இரட்டைத்தலைவர்களான எடப்பாடி.பழனிச்சமியையும், ஒ.பன்னீர்செல்வத்தையும் கவலைக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பத்திரிகையாளர்கள் கேட்கும் சசிகலா பற்றிய கேள்விகளையும் அவர்கள் தவிர்த்தனர்.
இத்தகைய சூழலில் இன்று, பிரதமர் நரேந்திர மோடியை ஓ.பன்னீர்செல்வமும்,எடப்பாடி பழனிசாமியும் தனிதனியாக சந்தித்தனர். அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி, கூறியாதாவது…
”சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ததற்காக நன்றி தெரிவித்தோம்.
மேலும்,தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் உடனடியாக வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை போக்க கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பை விரைந்து செயல்படுத்த பிரதமரிடம் கோரிக்கையினையும் வைத்துள்ளோம்.
அதோடு இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தினோம். என்றார்.
அப்போது நிருபர்கள் கேட்ட சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்ட எடப்பாடி பழனிசாமி நன்றி சொல்லியபடி கிளம்பினார்.
ஆனால் இந்த சந்திப்பின் போது, சசிகலா பற்றியும், அவரது செயல்பாடுகள் குறித்த சாதக பாதகங்கள் விவாதிக்கபட்டதாகவும் ஒரு ஆதாரமற்ற செய்தி உலவி வருகிறது.