திரைப்பட இயக்குநராகும் ஆசையில் இருக்கிறார், நாயகன் உதய் கார்த்திக். இதற்காக பல தேடுதலுக்குப் பிறகு, அவருக்கு பிரபலமான ஒரு தயாரிப்பாளர் வாய்ப்பு தருவதற்கு முன் வருகிறார். மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்கிறார், உதய் கார்த்திக். படப்பிடிப்புக்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. அந்தப்படத்தில் நடிக்கும் ஹீரோ, உதய் கார்த்திக்கின் கதை பிடித்திருந்தாலும் அவர் இயக்குவதை விரும்பவில்லை. அதனால், படத்தின் தயாரிப்பாளர், கதையை மட்டும் கொடுக்கச் சொல்லி உதய் கார்த்திக்கிடம் கேட்கிறார். அதற்கு அவர் மறுக்கிறார். இதன் காரணமாக படப்பிடிப்பு நடக்காமல் போகிறது.
உதய் கார்த்திக் விரக்தியின் உச்சத்திற்கு செல்கிறார். எதிர்காலமே இருண்டதாக புலம்புகிறார். இந்நிலையில் அவரது குடும்பம், சொற்ப பணத்தோடு படத்தினை தயாரிக்க முன் வருகிறது.
உதய் கார்த்திக் இயக்குநரானாரா, இல்லையா? என்பது தான், ‘ஃபேமிலி படம்’.
சினிமா உதவி இயக்குநர்கள் பற்றிய படங்கள் இதற்கு முன் பல வந்திருக்கின்றன. இருந்தாலும், ஒரு குடும்பமே படத்தினை தயாரிக்க முன் வருவது மாதிரியான கதையை, காமெடி செண்டிமென்ட் கலந்து, நல்ல திரைக்கதையால் வசீகரித்திருக்கிறார், இயக்குநர் செல்வகுமார் திருமாறன்.
நாயகன் உதய் கார்த்திக், சினிமா இயக்குநராகும் லட்சியத்திலிருக்கும் இளைஞராக, நடிப்பில் அசத்தியிருக்கிறார். சந்தோஷம், சோகம், துக்கம் என அனைத்து உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வாய்ப்பு தேடும் இயக்குநராகவே மாறிப்போயிருக்கிறார்.
நாயகனின் காதலியாக நடித்திருக்கும் நாயகி சுபிக்ஷா, கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
நாயகனின் அண்ணனாக நடித்திருக்கிறார், விவேக் பிரசன்னா. அவர், தம்பி இயக்குநராவதற்கு, சக வக்கீல் நண்பரிடம் பணம் கேட்டுப்போகும் போது, லைஃப் செட்டில்மென்ட் குறித்து பேசும் வசனங்கள் டச்சிங்கானவை. மற்றொரு அண்ணனாக நடித்திருக்கும் பார்த்திபன் குமாரின் நடிப்பும் கச்சிதம்.
நாயகனின் அம்மாவாக ஸ்ரீஜா ரவி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் காயத்ரி, நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் ‘பட்டிமன்றப் பேச்சாளர்’ மோகனசுந்தரம், என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் படத்தின் பலமாக இருக்கிறார்கள். அஜித் ரசிகராக நடித்திருப்பவர் சிறப்பு கவனம் பெறுகிறார்.
மெய்யேந்திரனின் ஒளிப்பதிவும், அனிவீயின் பின்னணி இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.
சினிமாவில், உதவி இயக்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வித்தியாசமான திரைக்கதையில், ஒரு சின்ன மெஸேஜுடன், செல்வ குமார் திருமாறன்.