ஃபர்ஹானா – விமர்சனம்!

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க செல்வ ராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், கிட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், ஃபர்ஹானா. ‘ட்ரீம் வாரியர்’ பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர். நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கிறார்.

இஸ்லாமிய மத கோட்பாடுகளில் அதிக பற்று கொண்ட, குடும்பத்தின் மருமகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது கணவர் ஜித்தன் ரமேஷ். ஒரு சிறிய செருப்புக் கடையின் சொற்ப வருமானமே, இவர்களது அனைத்து தேவைகளுக்குமாக இருக்கிறது.

குடும்பத்தின் ஏழ்மை காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ், பல எதிர்ப்புகளை மீறி, வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். கணவர், ஜித்தன் ரமேஷின் ஒத்துழைப்போடு, ஒரு கால் சென்டரில் வேலைக்கு சேர்கிறார். அவருக்கு கிரெடிட் கார்டு ஆர்டர் எடுக்கும் பிரிவில் வேலை கொடுக்கப்படுகிறது. சேர்ந்து ஒரிரு மாதங்களிலேயே வேலையில் சிறந்து விளங்குகிறார். சம்பளம், இன்சென்டிவ் என பணம் வரவே குடும்பத்தின் ஏழ்மை சூழல் மாறுகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அதே கால்சென்டரில் அதிகமான இன்சென்டிவ் கிடைக்கும் வேறு பிரிவுக்கு செல்கிறார். அந்த பிரிவுக்கு சென்ற பின்னர் அது ஒரு ‘செக்ஸ் சாட்’ செய்யும் பிரிவு என்பதை தெரிந்து கொள்கிறார். அதிலிருந்து வெளியே வர முயற்சிக்கையில், கால் சென்டரின் நிர்வாகம் அதை மறுக்கிறது. அதன் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் மனதின் காயத்திற்கு ஒரு ஆண் ஆறுதல் தருகிறார். அது நாளடைவில் இருவருக்குமான நட்பினை மேலும் உறுதிபடுத்துகிறது.  இதனால் அந்த ஆண் நண்பரை நேரில் சந்திக்க முடிவெடுக்கிறார். அது அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி கணவன் ஜித்தன் ரமேஷூக்கு தெரிய வருகிறது. இதன் பின்னர் என்ன நடந்தது என்பதே ஃபர்ஹானா படத்தின் சுவாரஷ்யமான கதை,திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

உருது மொழியில் ஃபர்ஹானா என்றால், மகிழ்ச்சியானவள் என்று பொருள். கரீம் என்றால், உன்னதமானவன் என்று பொருள். இவைகளுக்கு வேறு சில பொருள்களும் உண்டு.

ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷூம், கரீமாக ஜித்தன் ரமேஷூம் சிறப்பாக அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். அற்புதமான நடிப்பு. அதை விட இஸ்லாமிய மத கோட்பாடுகளில் அதிக பற்று கொண்ட முஸ்லீம் பெரியவராக கிட்டி, அற்புதமாக அவரது கதாபாத்திரத்தை மெருகூட்டியிருக்கிறார்.

ஐஸ்வர்யா தத்தா எதைபற்றியும் கவலைப்படாத கால் சென்டர் பெண்ணாக நடித்திருக்கிறார், குறை சொல்லமுடியாத நடிப்பு. அதேபோல் அனுமோல் நடிப்பும்.

வில்லனாக மிரட்டியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அவரது நயவஞ்சகமான கதாபாத்திரம் அவருக்கே உரித்தானது. செல்வராகவன் முகத்தை சிறிது சிறிதாக காட்டிய ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் பாராட்டுக்குரியவர்கள். அவரின் முகத்தை உடனேயே பார்த்துவிட  ரசிகர்களின் ஆவலை தூண்டிவிடுகிறது

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான படங்களில் இந்தப்படம் சிறப்பானதாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் உருது பேசும் இஸ்லாமிய குடும்பத்தை அப்படியே பிரதி எடுத்திருக்கிறார். தமிழும், உருதும் கலந்த வசனங்கள், படத்தின் மிகப்பெரிய பலம்.

ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

மதம், மொழி  இவைகளை தாண்டி  அனைத்து பெண்களும் தங்களுடைய பொருளாதார தேவைகளுக்காக வேலைக்கு செல்வதில் தவறில்லை. என்பதையும்,

பெண்கள் பாலியல் அத்துமீறல்களை சந்தித்து கொண்டு தான் வருகிறார்கள். அதிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்வது அவர்களது கைகளிலேயே இருக்கிறது, என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

 

ஃபர்ஹானா குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்!