‘ரீல் குட் ஃப்லிம்ஸ்’ சார்பில், ஆதித்யா தயாரித்து, லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் வெளியிட்டிருக்கும் படம், ஃபைட் கிளப். இதில், ‘உறியடி’ விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘வட சென்னை’, ‘பொல்லாதவன்’போன்ற திரைப்படங்களின் சாயலில் வந்துள்ள இப்படம், ரசிகர்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.
ஒரு மனிதனின் வெற்றிக்கும், தோல்விக்கும் அவனது சமூகச் சுற்றுச்சூழலே காரணமாக அமைகிறது. அதன்படி தான், வட சென்னையில் மலிந்து கிடக்கும் போதை பொருட்களும், அதை சுற்றி நடக்கும் மற்ற விஷயங்களும் அங்கு வாழும் இளைஞர்களின் எதிர்காலத்தினை எப்படி சிதைக்கிறது என்பதையும், விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் இளைஞனின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதையும், ஸ்டைலிஷான மியூசிக், எடிட்டிங், கேமிரா ஆங்கிளுடன் படம் பிடித்துள்ளனர். இதற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
‘ஃபைட் கிளப்’ படத்தின், முதல் மூன்று நாட்களின் வசூல் சுமார் 5 1/2 கோடியாகும். இது சமீபத்தில் வெளியான படங்களிடையே சாதனையாக பார்க்கப்படுகிறது. இப்படம் வெளியான நாள்முதல் இன்றுவரை, பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.