குத்துச்சண்டை வீரரான கார்த்திகேயன் சந்தானம், போதையின் பிடியிலிருந்து தன் பகுதி இளைஞர்களை நல்வழிப்படுத்த நினைப்பவர். அதற்காக, அவர்களை விளையாட்டின் பக்கம் திருப்பி, நல் வாழ்க்கை அமைத்து கொடுக்க ஆசைப்படுகிறார். இதில், விளையாட்டு வீரராக ஆகிவிட நினைக்கும் துடிப்பான இளைஞர்களில் விஜயகுமாரும் ஒருவர்.
கார்த்திகேயனுக்கு நேரெதிரானவர், சங்கர் தாஸ். இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்குவதுடன் அவர்களை வைத்தே கஞ்சா வியாபாரமும் செய்து வருகிறார். இவர்களுக்குள் ஏற்படும் மோதலில், கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பி அவினாஷ், உதவியுடன் கார்த்திக் சந்தானம் கொலை செய்யப்படுகிறார். அவினாஷ் சிறைக்கு செல்ல, போதை பொருட்களை விற்ற, சங்கர் தாஷ் லோக்கல் அரசியல்வாதியாக உருவெடுத்து, கட்சியில் முக்கிய பொறுப்பிற்காக காத்திருக்கிறார். சிறையிலிருந்து வெளியே வரும் அவினாஷ், விஜய் குமாரின் மூலமாக சங்கர் தாசை கொலை செய்ய திட்டமிடுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே, ‘ஃபைட் கிளப்’. படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
படம், முழுக்க.. முழுக்க… ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சிகள் ஏராளம். ’உறியடி’ படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த விஜய் குமார், கதாபாத்திரமாகவே மாறிப் போயிருக்கிறார். கதாபாத்திரத்திற்காக அதிக உடலுழைப்பினை கொடுத்திருப்பது காட்சிகளில் நன்றாகவே தெரிகிறது.
குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கும் தயாரிப்பாளர், கார்த்திகேயன் சந்தானம், வில்லனாக நடித்திருக்கும் சங்கர் தாஸ், அவினாஷ் உள்ளிட்டோர், அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக கார்த்திகேயன் சந்தானத்தின் நடிப்பு உயிர்ப்பாக இருக்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கிறார், மோனிஷா மோகன். காதல் காட்சிகளில் கவனம் பெறுகிறார்.
ஃபைட் கிளப், இந்த தலைப்புக்கேற்றபடி படம் முழுவதும் இடம்பெற்ற சண்டைக்காட்சிகளை, ஒளிப்பதிவாளர் பிரிட்டோ சூப்பராக படம் பிடித்திருக்கிறார். இவரின் ஒளிப்பதிவு படத்தின் பலமாக இருக்கிறது.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, சிறப்பாகவே இருக்கிறது.
போதைப் பொருள், அடிதடி, கொலை, அரசியல் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள், பலியாகும் இளைஞர்களின் வாழ்க்கை. இது தான் வட சென்னை. என்ற சினிமா கூற்றுப்படி இந்த ஃபைட் கிளப்பும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் பல படங்கள் வந்திருந்தாலும்,விறுவிறுப்பான திரைக்கதை அதிலிருந்து வேறுபடுகிறது.
ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே, அப்பாவி இளைஞர்கள் இந்த நரகத்திற்குள் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள், என்பதை அழகாக சொல்லியிருப்பது சிறப்பாக இருக்கிறது. ஆனால் காலகாலமாக சிக்கும் இளைஞர்களை வெளிக்கொண்டுவர, எந்த சக்தி இல்லவே.. இல்லை! என்பதை சித்தரித்திருப்பது சோகம்!
‘ஃபைட் கிளப்’ படத்தினை ஒரு ‘கல்ட் கிளாசி’க்காக உருவாக்க நினைத்திருப்பது, படத்தின் மேக்கிங்கில் மட்டுமே தெரிகிறது!