‘ஃபைண்டர்’ – விமர்சனம்!

அரபி புரடக்‌ஷன்ஸ் மற்றும் விஜயன் வெஞ்சர்ஸ் சார்பில், ரஜிப் சுப்ரமணியம் மற்றும் வினோத் ராஜேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ள ‘ஃபைண்டர்’ படத்தினை, வினோத் ராஜேந்திரனே தயாரித்திருப்பதுடன் அவரே இயக்கி நடித்திருக்கிறார். அவருடன் நிழல்கள் ரவி, சார்லி, செண்ட்ராயன், தாரணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

குற்றவியல் துறையில் (Criminology) பட்டம் பெற்ற நாயகன் வினோத் ராஜேந்திரன், தனது நண்பர்கள் சிலரை சேர்த்துக் கொண்டு ‘ஃபைண்டர்’ எனும் துப்பறியும் ஆரம்பிப்பதுடன், ஜெயிலில்  இருக்கும் குற்றமற்ற அப்பாவிகளை விடுவிக்கும் வேலையினை செய்து வருகிறார். இந்த நிலையில், பணத்தேவைக்காக செய்யாத குற்றத்தினை தான் செய்ததாகக் கூறி சிறை செல்கிறார், சார்லி.  ஜெயிலுக்கு சென்ற பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணரும் அவர் செய்வதறியாது துடிக்கிறார். இதை தெரிந்து கொள்ளும் நாயகன் வினோத் ராஜேந்திரன், அவரை வெளியே கொண்டுவர முயற்சிக்கையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுவே, ‘ஃபைண்டர்’ படத்தின், பரபரப்பான துப்பறியும் திரைக்கதை!

கதையின் நாயகனாக நடித்திருக்கும் வினோத் ராஜேந்திரன், ஒரு உண்மையான சம்பவத்தினை எடுத்துக் கொண்டு, கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லருக்கு என்ன வேண்டுமோ அதை திரைக்கதையில் சிறப்பாகவே கொண்டு வந்திருக்கிறார். நடிப்பினை பொறுத்த வரை கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்தும் இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் தாரணியின் நடிப்பு ஓகே. பெரிதாக அவருக்கு கதாபாத்திரம் அமையவில்லை. வழக்கமாக நாயகிகளின் பங்கு என்னவோ அதே தான் இவருக்கும். திரைக்கதைக்கு சம்பந்தமில்லாத கதாபாத்திரம்.

கதை நகர்வின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி, தன்னுடைய பக்குவப்பட்ட நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஏமாற்றப்பட்டு ஜெயிலுக்கு வந்திருப்பதை நினைத்து கலங்கும் இடத்தில் ரசிகர்களின் பரிதாபத்தினை எளிதில் பெற்றுவிடுகிறார். ஒரு சில காட்சிகளில் அவரது வழக்கமான அதீத நடிப்பு, அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அடுத்தபடியாக செண்ட்ராயனுக்கு முக்கியமான கதாபாத்திரம். நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. இருந்தாலும் கிடைத்த காட்சிகளில் ஸ்கோர் செய்துவிடுகிறார்.

நிழல்கள் ரவி, தனது அனுபவமான நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

மற்றபடி, வழக்கறிஞர் சரண்ராஜ், காவல்துறை அதிகாரி ருத்ரசுவாமி, வேளச்சேரி கவுன்சிலர் என நடித்திருப்பவர்கள் அனைவரும் சரியானபடியே நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பிராசந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவும், சூர்ய பிரசாத்தின் இசையும் கவனம் பெறுகிறது. ஆங்காங்கே சிற்சில குறைகள். மற்றபடி பரவாயில்லை!

’ஃபைண்டர்’ –  பரபரப்பு!