விருது வழங்குவது, மனசாட்சியுடன் இருக்க வேண்டும்! – இயக்குநர் கே. பாக்யராஜ்!

பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என, தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர், சித்ரா லட்சுமணன். இவர் தனது ‘டூரிங் டாக்கீஸ்’ யூடியூப் சேனல் மூலமாக தமிழ் திரைப்பட வரலாற்று சம்பவங்களை தொகுத்து, பிரபலங்களிடம் நேர்காணல் வழியாகவும் அளித்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, ‘டூரிங் டாக்கீஸ்’ யூடியூப் சேனல் சார்பில், 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்படத் துறையின், சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் “ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME)” விருது வழங்கும் விழா, ஜனவரி 25ஆம் தேதி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

அது குறித்து சித்ரா லட்சுமணன் பேசும்போது,

‘ஒரு பத்திரிக்கை தொடர்பாளராக இருந்து தான், நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். டூரிங் டாக்கீஸ் சேனலில் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமில்லாமல், தோல்வியடைந்தவர்கள் பற்றியும் நாம் பேசியுள்ளோம். சினிமாவை பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். என்று தான் அந்த ஒரு முடிவை எடுத்தோம். நாம் திரையுலகில் இருக்கிறோம், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான், ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா. கலைஞர்கள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், மேடையில், அவர்கள் வாங்கும் கைதட்டல்கள் எதற்கும் ஈடாகாது. இந்த விருது வழங்கும் விழாவிற்கு கே. பாக்யராஜ் அவர்கள், தேர்வுக் குழுவின் தலைவராக செயல்பட, குஷ்பூ சுந்தர், இளவரசு, முரளி ராமசாமி, டி. சிவா, ஆர். கே. செல்வமணி,  ஆர். பி. உதயகுமார் ஆகியோர் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கின்ற குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பத்திரிக்கை தொடர்பாளர் தொடங்கி, இயக்குனர் கதாநாயகன், கதாநாயகி என 50 கேட்டகிரியில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. வழக்கமாக கொடுக்கப்படும் விருதுகள் மட்டும் இல்லாமல் ஸ்பெஷல் ஆக சில விருதுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது, அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். விருது வழங்கும் விழா என்பது மிகப்பெரிய வேலை. நீண்ட நாட்களாக இது தொடர்பாக யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 25ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. நன்றி. என்றார்.

ஃப்ரேம் & ஃபேம் தேர்வுக்குழு தலைவர், கே பாக்யராஜ் அவர்கள் பேசும்போது,

பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். எப்போதும் கற்றுக் கொள்வதற்கு வயதில்லை. நல்ல பத்திரிகையாளர் என்ற முறையில் சித்ரா லட்சுமணன் அவர்களை ஆரம்ப காலத்தில் இருந்து தெரியும். இந்த காலத்தில் விளம்பரம் என்பது கண்டிப்பாக தேவை. ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) என்பது ஒரு நல்ல பெயர். விருது வழங்கும் விழாவில் நடுவராக இருக்கும்போது ரெக்கமண்டேசன் அதிகமாக வரும். மனசாட்சியை தூக்கி வைத்துவிட்டு, நியாயமாக இதனை செய்யும் போது நிறைய பேரிடம் திட்டு வாங்க வேண்டி வரும். இந்த விருது வழங்கும் விழாவை நியாயமான முறையில் சரியான முறையில் வழங்குவார்கள். வரும் காலங்களில் சித்ரா லட்சுமணன் அவர்களின் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) விருது வாங்குவது மரியாதையான விஷயமாக இருக்கும். என்றார்.

ஃப்ரேம் & ஃபேம் விழா அமைப்புக் குழு :

திரு. ஏ.சி. சண்முகம், திரு. ஐசரி கணேஷ், திரு. கண்ணன் ரவி (துபாய்) ஆகியோர் இணைந்து வழங்கும் இந்த பிரம்மாண்டமான விருது விழாவை, பல ஆண்டுகளாக விருது விழாக்களை வெற்றிகரமாக நடத்தி வரும் அனுபவமிக்க பத்திரிகைத் தொடர்பாளர்களான திரு. சிங்கார வேலு, திரு. ரியாஸ் கே. அஹமத், செல்வி. பாரஸ் ரியாஸ் ஆகியோர் அமைப்பாளர்களாக ஒருங்கிணைக்கின்றனர்.