மதவாத பா.ஜ.க ஆட்சியை அகற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு ஆதரவு அளித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன விபரம் வருமாறு..
மத்தியில் ஆளும் மதவாத பா.ஜ.க ஆட்சியை அகற்ற வேண்டுமென்கிற நோக்கில் இந்தியாவின் அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும், ஆந்திர மாநிலத்தின் முதல்வர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்கள் இன்று (09-11-2018) என்னை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தேன்.
மாநிலங்களின் உரிமைகள் எல்லாம் மோடியின் ஆட்சியில் முழுமையாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை தடுத்து நிறுத்த அனைத்து மாநிலங்களில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பிஜேபி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நீதிமன்றமாக இருந்தாலும் சரி, சி.பி.ஐ, ஆர்.பி.ஐ ஆக இருந்தாலும் சரி எந்த அமைப்புகள் எல்லாம் சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்படக்கூடிய அமைப்புக்களோ அவற்றை அச்சுறுத்துகிற நிலையிலேதான் மோடி தலைமையில் இருக்கக்கூடிய பிஜேபி ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இதனை உடனடியாக தடுக்க வேண்டும்!
இந்திய அரசியல் செல்ல வேண்டிய சரியான பாதை ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் வரையறுத்தார்.
பாசிச பாஜகவிடமிருந்து மாநிலங்களின் உரிமைகளையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நானும் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களும் கலந்தாலோசித்துள்ளோம்!
விரைவில், இதுகுறித்து அனைத்து தலைவர்களும் பங்கேற்கிற வகையில் நடைபெறுகிற கூட்டத்தில் நான் பங்கேற்பேன் என்கிற உறுதியை அவரிடத்தில் தெரிவித்தேன்! என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.