‘காமி’  (GAAMI-Telugu) – விமர்சனம்!

அஹோரிகளுடன், காசியில் சுற்றித்திரியும் நாயகன் விஷ்வக் சென், தான் யார்? எனத்தேடும் படலமே ‘காமி’. மற்ற மனிதர்களைப் போல் அல்லாமல், விஸ்வக் சென்னுக்கு ஒரு வித்தியாசமான தொடு உணர்வு ஏற்படுகிறது. அதாவது, பிற மனிதர்கள் அவரை தீண்டினால், அவருக்கு புல்லரிப்பதைப்போல் கிட்டத்தட்ட ஒரு  கரண்ட் ஷாக் அடிப்பதைப் போல் உணர்கிறார். இதனால், அவர் இன்னலுக்கும் ஆளாக நேரிடுகிறது. இதிலிருந்து விடுவித்துக்கொள்ள, ஆன்மீக வைத்தியரின் உதவியை நாடுகிறார் விஷ்வக் சென். அந்த ஆன்மீக வைத்தியரின் அறிவுரைப்படி,  இமயமலைப் பகுதியில் 36 வருடங்களுக்கு ஒரு முறை வளரும், ஒரு அபூர்வக் காளான் மூலம் தன் பிரச்சனைக்கு தீர்வுகான அதை தேடிச் செல்கிறார். அவருக்கு உதவியாக, அந்த அபூர்வக் காளனைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் மருத்துவர் சாந்தினி செளத்ரியும் சேர்ந்து கொள்கிறார்.

விஷ்வக் சென்னும், சாந்தினி செளத்ரியும் ஆபத்தான இமயமலைப்பகுதிக்கு செல்லும் நிலையில், ஒரு சிறுவன் தன்னைக் காப்பாற்றுமாறும், ஒரு சிறுமி தன்னை தொடர்வது போலவும் தன் நினைவில் வந்து போவதை உணரும் விஷ்வக் சென் குழப்ப நிலையில், ஒரு பெரிய ஆபத்திலும் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து இருவரும் மீண்டனரா, இல்லையா? என்பதே காமி.

நாயகனாக நடித்திருக்கும் விஷ்வன் சென், மருத்துவராக நடித்திருக்கும் சாந்தினி செளத்ரி, சிறுமி ஹரிகா பெட்டா, சிறுமியின் அம்மாவாக நடித்திருக்கும் அபிநயா, ஆய்வுக்கூட சிறைச்சாலையில் சிக்கித்தவிக்கும் சிறுவன், என படத்தில் நடித்திருக்கும் அனைவரும், கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மூன்று நிலையிலிருந்து கதைகள் சொல்லப்பட்டாலும், மூன்று கதைகளுக்கும், மூன்று கதாபாத்திரங்களுக்கும் தொடர்பு இருப்பதை, யூகிக்க முடியாத, சாகசம் நிறைந்த திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர், வித்யாதர் ககிடாவும், பிரத்யூஷ் வத்யமும். கிளைமாக்ஸ் வரை நிச்சயம் யாராலும் யூகிக்க முடியாதபடி இருப்பது தான் படத்தின் பலம்.

அடுத்ததாக படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் VFX காட்சிகள் தான்.  இமயமலைப் பயணத்தையும், அதில் ஏற்படும் ஆபத்துக்களையும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

விஷ்வநாத் ரெட்டி செலுமல்லாவின் ஒளிப்பதிவு, நரேஷ் குமரன் பின்னணி இசை, இரண்டும் சிறப்பு!

ஒரு சில குறைகள் இருந்தாலும்,  ‘காமி’ வைக்கிறது.