‘கஜானா’ –  விமர்சனம்!

‘ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து, கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம், கஜானா. இதில் யோகி பாபு, வேதிகா, சாந்தினி, இனிகோ பிரபாகர், பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கஜானா, புராண இதிகாசங்களிலிருந்து கூடுதல் கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ள மாயாஜால படம்.

நாகமலை என்ற அடர்ந்த வனப்பகுதியில், பல கோடி மதிப்புள்ள புதையல் ஒன்று புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப்புதையலை, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்நத ‘யாளி’ என்ற விலங்கு பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்தப்புதயலை எடுக்க பல்வேறு குழுக்கள் முயற்சி செய்து, பலரும் பரிதாபமாக உயிரை விடுகின்றனர். இந்நிலையில். இனிகோ பிரபாகர் தனது குழுவினருடன் அந்தப்புதயலை எடுக்க நாகமலைக்கு செல்கிறார்.

இந்நிலையில், தொல்லியல் துறைக்கு பல ரகசியங்களை வெளிப்படுத்திக்கொடுக்கும், பிரபல அகழ்வாராய்ச்சியாளர் வேதிகாவும், அந்தப்புதையலைத் தேடி வருகிறார்.

இதற்கிடையே, நாகர் வம்சத்திற்கு சொந்தமான நாகரத்தின கல்லை கைப்பற்ற, கருட இனத்தின் தலைவி சாந்தினி முயற்சிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், கஜானா படத்தின் கதை.

படம் ஆரம்பமானவுடனே ஒரு விதமான சுவாரசியம் தொற்றிக்கொள்கிறது. அடர்ந்த காடு. கொடிய மிருகங்கள். யானை, புலி, குரங்குகளுடன் யாளி என்ற விலங்குகளை கிராபிக்ஸ், அனிமேஷன் மூலமாக காட்டி பரவசப்ப டுத்தியிருக்கிறார்கள். இது சிறுவர்களுக்கு பிடிக்கும்.

படத்தில் நடித்த ஹரீஷ் பெராடி, சாந்தினி, வேதிகா , இனிகோ பிரபாகர், பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன் ஆகியோர் திரைக்கதையின முக்கிய நகர்வுக்கு காரணமாகவும் திரைக்கதையினை சுவாரசியப்படுத்தவும் பயன்பட்டிருக்கிறார்கள்.

யோகிபாபு, மொட்டை  ராஜேந்திரன் இருவரும் திரைக்கதைக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் வலம் வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி  ஆகியோர் அடர்ந்த வனப்பகுதியினை, அமானுஷ்யமாக காட்டி படத்திற்கு பலமாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசை ஓகே!

எழுதி இயக்கியிருக்கும் பிரபதீஸ் சாம்ஸ், யாளி காலத்திய உலகத்தினை தனது கற்பனை மூலமாக, சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

முக்கியமாக சாந்தினி குழுவினருடன் யாளி மோதும் காட்சிகள், ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில், ‘கஜானா’  கோடை விடுமுறைக்கு ஏற்ற சிறுவர்களுக்கான படம்!