‘கேம் சேஞ்சர்’ – விமர்சனம்!

ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரித்து, இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் படம், ‘கேம் சேஞ்சர்’. இதில், ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, ஶ்ரீகாந்த், சமுத்திரக்கனி, ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, சுனில், நவீன் சந்த்ரா, அச்யுத் குமார், வெண்ணிலா கிஷோர், பிரம்மாணந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை அமைத்துள்ளார் எஸ்.தமன்.

கேம் சேஞ்சர் திரைப்படம், தெலுங்கு மொழியில் வெளியான அதே நேரத்தில், தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது,

ஆந்திரபிரதேசத்தின் முதலமைச்சர் ஸ்ரீகாந்த். அவருக்கு ஜெயராம் , எஸ்.ஜே. சூர்யா என இரண்டு மகன்கள். இவர்களுக்குள் அடுத்த முதலமைச்சர் யார், என்பதில் பலத்த போட்டி இருந்து வருகிறது. பெரும் ஊழல் பேர்வழியான எஸ்.ஜே. சூர்யாவின் தலைமையில், நவீன் சந்த்ராவின் மேற்பார்வையில் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்த கொள்ளையை தடுத்து, எஸ்.ஜே. சூர்யாவின் கூட்டணியினரை, கலெக்டர் ராம் சரண் தனது அதிரடி நடவடிக்கைகளால் கலங்கடிக்கிறார். இதன் காரணமாக எஸ் ஜே சூர்யா – ராம் சரண் இருவரிடையே கடும் பகை உருவாகிறது. இதற்கிடையே, முதலமைச்சர் ஶ்ரீகாந்த் உடல்நலக் குறைவால் உயிரிழக்கிறார். கட்சியினரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் எஸ்.ஜே.சூர்யா, பதவி ஏற்க தயாராகிறார். ஆனால், ராம் சரண் அதற்கு தடையாக நிற்கிறார். இதன் பிறகு எஸ்.ஜே.சூர்யா என்ன செய்தார். இருவருக்குமான பகை என்ன ஆனது என்பது தான் கேம் சேஞ்சர்.

ஒரு அரசை வழி நடத்திச்செல்ல, அதிக யாருக்கு அதிகாரம் யாருக்கு? என்பதின் போட்டா போட்டியே கேம் சேஞ்சர் படத்தின் திரைக்கதை. ராம் சரணுக்கு இரண்டு கதாபாத்திரம். மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு குரல் கொடுத்து போராடும் தலைவராகவும், கலெக்டராகவும் நடித்திருக்கிறார். அதோடு கல்லூரி மாணவராக, கியாரா அத்வானியை காதலிப்பவருமாக, ஆடல் பாடல் காட்சிகளில் அமர்க்களப் படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, பாடல் காட்சிகளுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். கியாரா அத்வானியும் அதை புரிந்து கொண்டு, இளைஞர்களை கவர்ந்திழுக்கும் விதவிதமான உடைகளில் கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார்.

மக்களுக்கான அமைப்பின் தலைவரான ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலி, திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார்.

முதலமைச்சராவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யும், ஊழல் பெருச்சாழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, வழக்கமான தனிப்பட்ட நடிப்பினால் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார். படத்தின் பலமாக இருக்கிறார். திரைக்கதையின் வேகமான நகர்வுக்கு, இவரது நடிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

அமைச்சர் மாவீரன் மாணிக்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம், படம் முழுவதும் கலகலப்பூட்டுகிறார்.

மற்றபடி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், நவீன் சந்திரா ஆகியோர் குறிப்பிடும்படி நடித்துள்ளனர். இவர்களில் சுனில் சிரிக்க வைக்கிறார்.

காட்சிகளை பிரமாண்டமாகவும், கலர் ஃபுல்லாகவும், குறிப்பாக கியாரா அத்வானியை இளைஞர்கள் தேவைக்கேற்ப ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் திரு.

இசையமைப்பாளர் தமனின் இசையில், பாடல்களில் பழைய சாயல்கள் இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது.

படத்தொகுப்பாளர்கள் சமீர் மொஹமத் மற்றும் ரூபன் இருவரும், ஷங்கரின் பிரமிப்பை கெடாமல் கொடுத்துள்ளனர்.

படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாக இருக்கிறது. இரண்டாம் பகுதி தொய்வடைகிறது.

இயக்குநர் ஷங்கரின் வழக்கமான ஃபார்மூலா, பிரம்மிக்க வைக்கும் பாடல்காட்சிகள், காமடி, ஊழல்வாதிகளின் உண்மை முகம், மக்களை விழிப்புணர்த்தும் காட்சிகள் என, ஷங்கரின் அதே வகையான இன்னொரு படமே, கேம் சேஞ்சர்.