அபிநய் கிங்கர், நிவாஸ் ஆதித்தன், எஸ்தர் நரோனா, ஆத்விக் ஜலந்தர் ஆகியோரது நடிப்பில், அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், கேம் ஆஃப் லோன்ஸ். ‘JRG PRODUCTION’ சார்பில், N. ஜீவானந்தம் தயாரித்துள்ளார். சபரி ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், ஜோ காஸ்டா.
சூதாட்டம் குறித்த ஒரு முன்னுரையுடன் திரைப்படம் ஆரம்பமாகிறது. டேனியல், ஜேனட் தம்பதியினருக்கு சாமுவேல் என்ற மகன். டேனியல் வேலையிழந்த நிலையில், அவரது மனைவி ஜேனட் வேலைக்குச்சென்று வருகிறார். சிக்கலான நிலையில் இவர்களது பொருளாதாரம். மிகவும் அழுத்தமான நிலையில் குடும்பத்தின் சூழல் காரணமாக வழக்கம் போல் ஜேனட் வேலைக்குச் செல்கிறாள்.
ஜேனட் சென்ற சிறிது நேரத்தில், டேனியல் வாங்கிய கடனை வசூலிக்க, விஸ்வா, அசோக் ஆகிய இருவரும் வீட்டிற்குள் நுழைகின்றனர். சூதாட்டத்திற்காக, லோன் ‘ஆப்’ மூலம் வாங்கிய 68 லட்ச ரூபாயை திருப்பி செலுத்த கடுமையான முறையில் டேனியல் நிர்பந்திக்கப்படுகிறார். அவருக்கோ, கடனை திருப்பி செலுத்த எந்தவிதமான வழியும் இல்லை. நீண்ட விவாதங்களுக்குப்பிறகு, டேனியல் ‘தற்கொலை’ செய்து கொண்டால், அனைத்து கடன்களும் தள்ளுபடி ஆகிவிடும். என்ற யோசனையை கூறுகிறார்கள். மனைவி, மகன் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கும் டேனியன் என்ன செய்தார்? என்பது தான், ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ படத்தின் கதை.
நாயகன் நிவாஸ் ஆதித்தன், தனியார் அமைப்புகளிடம் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும், நடுத்தர குடும்பத்தலைவனாக உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். குறிப்பாக, தற்கொலைக்கு முன்னர் பீதியாகி, தவிக்கும் காட்சி சிறப்பு.
நாயகியாக நடித்துள்ள எஸ்தர் நரோனாவும் சிறந்த முறையிலேயே நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். மிகுந்த மன அழுத்தத்துடன், மாதாந்திர கட்டணங்களை செலுத்த முடியாமல் மன உளைச்சலுடன் வேலைக்கு செல்லும் காட்சியில், அனைவரது பரிதாபத்தையும், அனுதாபத்தையும் பெறுகிறார்.
கடன் வசூலிப்பவர்களில் விஷ்வாவாக நடித்துள்ள அபிநய் கிங்கர், மிரட்டலான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அசோக்காக நடித்திருப்பவரும் ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளார்.
இயக்குநர் அபிஷேக் லெஸ்லி, மிகச்சில கதாபாத்திரங்களைக் கொண்டு, முழுத்திரைப்படத்தையும் ஒரு சிறிய வீட்டிற்குள்ளேயே படமாக்கியிருக்கிறார். கொஞ்சம் விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்தியிருக்கிறார். கடன் வாங்கித்தவிக்கும் மனிதர்களின் உணர்வுகளை வசனங்கள் அழகாக பிரதிபலிக்கிறது.
90 நிமிடங்கள், பாடல்கள் மற்ற வழக்கமான விஷயங்கள் இல்லாமல், கதையாகவே நகர்ந்து செல்கிறது. ஒளிப்பதிவாளர் சபரியும், இசையமைப்பாளர் ஜோ காஸ்டினும் திரைப்படத்திற்கு பெரிதும் பக்கபலமாக இருக்கிறார்கள்.
கடன் வாங்காமல் இருப்பதைக்கொண்டு வாழ்வது சிறப்பு. என்பார்கள் முன்னோர்கள். எளிதில் கிடைக்கும் கடன்களை பெற்று, சூதாட்டத்தால் அவர்களது வழ்க்கையையும், சுற்றியிருப்பவர்களது வாழ்க்கையையும் தொலைத்து வருபவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சூதாட்டம், ஆன்லைன் சூதாட்டம் போன்றவைகளில் ஈடுபடுபவர்களுக்கு , விழிப்புணர்வையும், எச்சரிக்கையையும் கொடுத்துள்ளது. இந்த, ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ திரைப்படம்.