‘காந்தி டாக்ஸ்’  –  விமர்சனம்!

விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதரி, அரவிந்த்சாமிவ் சித்தார்த் ஜாவித் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், காந்தி டாக்ஸ். இது ஒரு மௌனப்படம். எழுதி இயக்கியிருக்கிறார், கிஷோர் பாண்டுரங் பெலகர். ஒளிப்பதிவு, கரண் பி. ராவத். இசை, ஏ.ஆர்.ரஹ்மான். இத்திரைப்படம், ஜீ ஸ்டுடியோஸ், கியூரியஸ் & மூவி மில் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்துள்ளது.

அரவிந்த் சாமி, மும்பை கட்டுமானத்தொழில் ஒரு பெரிய தொழிலதிபர். போட்டியாளர்களின் சூழ்ச்சியால் மிகப்பெரிய சரிவை சந்திக்கிறார். விபத்தில் குடும்பத்தை இழப்பதுடன், கோர்ட் இவரது சொத்துகளை ஜப்தி செய்கிறது. செய்வதறியாது திகைத்து நிற்கும் அவர், பதுக்கி வைத்திருந்த பணத்தைக்கொண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நினைக்கிறார்.

மும்பை, எளிய மனிதர்கள் வசிக்கும் பகுதியில், உடல் நலம் சரியில்லாத தனது அம்மாவுடன் வசித்து வருகிறார், விஜய் சேதுபதி. வாரிசு அடிப்படையிலான அவரது அப்பாவின் வேலையைப் பெற அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார். 50, 000 ஆயிரம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்ற சூழல். சாப்பாட்டையே திருடி சாப்பிடும் சூழலில், 50,000 ஆயிரம் சாத்தியமா? இதனிடையே, எதிர்க்குடியிருப்பில் வசிக்கும் அதிதி ராவ் ஹைதரி மீது காதல் வேறு. இந்நிலையில், அரவிந்த்சாமியை நோட்டமிடும் விஜய்சேதுபதி, அவரிடம் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.

கோர்ட் கெடு விதித்த நாளில், அரவிந்த்சாமி தனது வீட்டை விட்டு வெளியேற மனமில்லாமல் தவிக்கிறார். அப்போது அவர் வீட்டுக்குள் நுழைகிறார் விஜய்சேதுபதி. அதே சமயத்தில், அரசியல்வாதிகளின் செல்வாக்கு பெற்ற திருடன் சித்தார்த்தும் அரவிந்த்சாமி வீட்டிற்குள் நுழைகிறார். மூவரும் ஒரே வீட்டுக்குள். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘காந்தி டாக்ஸ்’ .

அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி மற்றும் சித்தார்த் மூவரும் நன்கு நடிக்கத்தெரிந்த நடிகர்கள் என்பதால், வசனங்கள் பெரிதாக குறையாக தோன்றவில்லை. ஒரு சில இடங்களைத் தவிர. விஜய் சேதுபதி, டாய்லெட்  வரிசையில் நின்றபடி கெஞ்சும் காட்சியே அவரது சிறந்த நடிப்பிற்கு உதரணமாக அமைகிறது. அதேபோல் அதிதி ராவ் கதாரியுடனான காதல் காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது. அதிதியும் நன்றாகவே நடித்திருக்கிறார். அரவிந்த்சாமி நடிப்பிற்கு, கோர்ட் தீர்ப்பைக் கேட்டவுடன், சர்வமும் அடங்கிப்போய் கிடக்கும் அந்த ஒரு காட்சியே சாட்சி! சித்தார்த் ஜாதவ் சிரிக்க வைக்கிறார்.இப்படி ஒவ்வொரு நடிகர்களுமே, தங்களது சிறு சிறு முக பாவனைகளிலும், உடல் அசைவுகளிலும் புரிய வைத்து வசங்கள் இல்லாத இடங்களை நிரப்பிவிடுகின்றனர்.

ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத், ஏற்றத் தாழ்வுகளின்  மாறுபட்ட மனித வாழ்க்கையை அழகாக படம்பிடித்திருக்கிறார். காட்சிகளுக்கேற்றபடி இருக்கிறது, ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை. இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர், மிகச்சரியான தலைப்பின் மூலம், இந்தியாவில், அரசியல்வாதிகளின் ஊறிப்போன லஞ்ச லாவண்யங்கள் தைரியமாக படமாக்கியிருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள்.