சின்னா, ரிஷா ஹரிதாஸ் இணைந்து நடித்து, வீரங்கன் இயக்கியுள்ள படம், ‘கணேசாபுரம்’. பி. வாசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ராஜா சாய்.
கொள்ளையடிப்பதை குலத்தொழிலாக கொண்ட, ஒரு கூட்டத்தின் வரலாற்றை, கற்பனை கலந்து திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.
இரவில் கொள்ளையடிக்க செல்லும் ‘கணேசாபுரம்’ கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்களைப்போல் பல சிறு, குறு கொள்ளைக் கூட்டங்களின் தலைவனாக இருப்பவர் பசுபதிராஜ். கொள்ளையடிப்பதில் பெரும்பங்கு அவருக்கு தான்.
கணேசாபுரத்தை சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன், காசிமாயன் மூவரும் திறமையான கொள்ளையர்கள். கொள்ளையடிப்பதில் சிலவற்றை இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்கள்.
பஞ்சாயத்து நடக்கும்போது ஊர் பெரியவரும், தனது உறவினருமான ப்ளோரன்ட் பெரேராவை எதிர்பாராவிதமாக சின்னா அடித்து விடுகிறார்.
இதனால் ஃப்ளோரன்ட் பெரேராவின் ஆட்கள், சின்னாவையும் அவரது கூட்டாளிகளையும் கொல்லத்திட்டமிடுகின்றனர்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘அம்மாசி’ கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்துள்ள சின்னா, எப்போதும் வாயில் பீடியை வைத்துக் கொண்டு யோக்கியன் போல் பேசுவது சற்று முரண். இருந்தாலும் பாராட்டும்படி நடித்துள்ளார்.
காதல் காட்சிகள், படத்தோடு ஒட்டவில்லை. அந்தக்காதல் காட்சிகள் படத்தின் திரைக்கதைக்கும் பெரிதாக உதவவில்லை
ப்ளோரன்ட் பெரேரா, ராஜ சிம்மன், பசுபதி ராஜ், சரவண சக்தி ஆகியயோரை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை.
சின்னாவையும் அவரது கூட்டாளிகளையும் எளிதாக கொல்ல பல சந்தர்ப்பம் கிடைத்தும் ராஜ சிம்மன் கோஷ்டியினர் எளிதில் விடுவதுபோல் அமைக்கப்பட்ட காட்சிகளால் படம் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.
.போதிய கவனமின்றி அமைக்கப்பட்ட திரைக்கதையால் படத்திற்கு பெரும் பின்னடைவு.
சில உண்மை சம்பவத்துடன் சுப்ரமணியபுரம், பருத்திவீரன், அரவாண் போன்ற படங்களின் ஒரு சில பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்ட படத்தின் மொத்த உருவமே ‘கணேசாபுரம்’.