ப்ளாக்கி – ஜெனி மற்றும் மை லெஃப்ட் ஃபூட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம், கார்கி. இப்படத்தினை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளது.
சாய் பல்லவி, காளி வெங்கட் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆர் எஸ் சிவாஜி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதையினை ஹரிஹரன் ராஜுவோடு இணைந்து எழுதி, கவுதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார்.
சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ்.சிவாஜி காவலாளியாக இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுமியை 5 பேர் கொண்ட ஒரு கும்பல் பலாத்காரம் செய்து கொதறி போடுகிறது. இதை விசாரணை செய்யும் போலீஸ் காவலாளியான பல்லவியின் அப்பாவையும் கஸ்டடியில் எடுக்கிறது.
தனது அப்பாவை இந்த வழக்கில் அவரை வேண்டுமென்றே போலீஸ் சிக்கவைப்பதாக கூறி சட்டத்தின் உதவியை நாடுகிறார் சாய் பல்லவி. இதற்கு பிறகு என்ன நடந்தது என்பதே கார்கி படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையும், திடுக்கிடும் க்ளைமாக்ஸூம்.
படம் ஆரம்பித்த சில காட்சிகளிலேயே கதைக்குள் சென்றுவிடுகிறது. மேலும் அடுத்தடுத்த அதிர்ச்சியான திருப்பங்கள் க்ளைமாக்ஸ் வரை செல்வதால் படம் பார்ப்பவர்களுக்கு திக்… திக்… நிமிடங்களாகவே செல்கிறது, கனத்த இதயத்துடன்.
கார்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பல்லவி ஒவ்வொரு காட்சியிலும், காட்சிக்கு ஏற்ற வகையில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். முன்னணி நடிகைகளை ஓரங்கட்டிவிட்ட நடிப்பாற்றல். அப்பாவிற்காக போலீஸ் ஸ்டேஷனிலும், வக்கீல் ஜெயபிரகாஷிடமும் கெஞ்சும் காட்சிகளில் அவர் மேல் பரிதாபம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் கோர்ட்டில் மீடியாக்களிடமும், வக்கீல் காளி வெங்கெட்டிடம் சீறுமிடத்தில் அவரது கம்பீரம் மிளிர்கிறது.
காளி வெங்கட் நடித்த காட்சிகளும் ரசிக்கதக்க காட்சிகள். குறிப்பாக கோர்ட்டில் வாதாடும் காட்சியை சொல்லாம். பப்ளிக் பிராசிக்யூட்டர் கவிதாலயா கிருஷ்ணனிடம் தினறும் போதும் அவரை தினறடிக்கும் போதும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.
அடுத்தபடியாக சப் இன்ஸ்பெக்டராக வரும் பிரதாப்பின் நடிப்பும் எதார்த்தம் மீறாத நடிப்பு. நீதிபதியாக நடித்திருக்கும் திருநங்கை டாக்டர்.சுதா, இப்படி இவர்களுடன் நடித்த மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இயக்குனர் கௌதம் ராஜேந்திரனின் சிறந்த திரைக்கதையில் சமூக அக்கறை கொண்ட இந்தப்படத்தினை பார்க்கலாம்.