‘கெவி’ படம் வெளியாகும்போது இயக்குநர் அமீர் சொன்னதற்கான அர்த்தம் புரியும்  – இயக்குநர் தமிழ் தயாளன்!

ARTUPTRIANGLES FILM KAMPANY ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி  சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார்.  ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஜி.பாலசுப்பிரமணியன் சா.ராஜாரவிவர்மா இசையமைத்துள்ளனர்.

இயக்குநர் தமிழ் தயாளன் படம் குறித்து பேசும்போது,

“நாமெல்லாம் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு சென்றால் அங்குள்ள இயற்கையை ரசித்து விட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறோம். ஆனால் அந்த இயற்கையோடு இணைந்து அங்கே வாழ்கின்ற கவனிக்கப்படாத, குரலற்ற தங்களது வலியைக் கூட சொல்ல முடியாத மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை நம் கவனத்திற்கு வருவதில்லை. அவர்களைக் கடந்து தான் நாம் சென்று வருவோம். ஆனால் அவர்கள் நம் கவனத்தில் வராமலேயே போய் விடுவார்கள். அப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, வலியை வெகுஜன மக்களுக்கு கொண்டு செல்வது தான் இந்த கெவி படத்தின் நோக்கம்  இதற்காக கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே கிட்டத்தட்ட 110 நாட்கள் தங்கி இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அமீர், இந்த படத்தை கட்டாயம் தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு விஷயத்தைக்  கூறியிருந்தார். இந்த படத்தைப் பார்க்கும் போது தான், ரசிகர்கள் அமீர் எதற்காக அப்படி சொன்னார் என்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதில் சொல்லப்பட்டிருக்கும் மக்களின் வலியையும் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு உயிர் பிறப்பது இயற்கை. ஆனால் தானாகவே சாவது என்பது அந்த உயிர்கள் மீது, மக்கள் மீது தொடுக்கப்படும் ஒரு மிகப்பெரிய வன்முறை. வருங்காலங்களில் இந்த வன்முறை நடக்கக் கூடாது. அந்த மக்களும் கவனிக்கப்பட வேண்டும். அவர்களது கதறல் சத்தமும் இந்த உலகிற்கு கேட்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் எல்லாமே கிடைக்க வேண்டும் என்கிற கோணத்தில் தான் இந்த படம் தயாராகி உள்ளது என்றார்.

ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. கெவி படமானது வரும் ஜூலை  18 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.