‘கெவி’ –  விமர்சனம்!

‘ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி’  (ARTUPTRIANGLES FILM KAMPANY) சார்பில், மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி, ஜெகன் ஜெயசூர்யா ஆகியோர், ‘கெவி’ திரைப்படத்தினை, தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடித்திருக்க, ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் காயத்ரி, ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன், உமர் ஃபரூக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘கெவி’  திரைப்படத்தினை தமிழ் தயாளன் இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர்கள் ஜி.பாலசுப்பிரமணியன் சா.ராஜாரவிவர்மா இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜெகன் ஜெயசூர்யா.

கொடைக்காணாலில் உள்ள குக்கிராமங்களில் ‘கெவி’ கிராமும் ஒன்று. இங்கு வாழும் ஆதவன், மக்களுடன் சேர்ந்து  சாலை, மருத்துவ வசதிகள் கேட்டு போராடுகிறான். அப்போது எதிர்பாராத விதமாக கிராம மக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்படுகிறது. இதில், வனத்துறை அதிகாரியான சார்லஸ் வினோத் மீது செருப்பு வீசப்படுகிறது.  இதனால் ஆதவனை சார்லஸ் வினோத் தாக்க முற்படுகிறார். சில நாட்களில் தேர்தல் வருவதால் அந்தத் தொகுதியின் அரசியல் வாதி  அவரை தடுப்பதுடன், மேலும் அவமானப்படுத்துகிறார். கோபத்தின் உச்சிக்கு செல்லும் சார்லஸ் வினோத், ஆதவனை அடித்து சித்ரவதை செய்து, கொல்ல நினைக்கிறார். இதற்கிடையே, ஆதவனின் மனைவி ஷீலாவுக்கு பிரசவ வலி வருகிறது. கிராமத்தினர் அவரை டோலி கட்டி தூக்கிச் செல்கின்றனர். வழியில் பனிக்குடம் உடைந்து உயிருக்கு போராடுகிறார். ஆதவன், ஷீலா இருவரும் உயிர் பிழைத்தனரா, இல்லையா? என்பதே கெவி.

அறிமுக நாயகன் ஆதவன், ‘மலையன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய தோற்றமும், நடிப்பும் அந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்துகிறது. சார்லஸ் வினோத் கோஷ்டியினரிடம் சிக்கி அடிவாங்கும் போதும், திருப்பி அடிக்கும் போதும் ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களை கவர்கிறார்.

உயிருக்கு போராடும் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருக்கும் ஷீலா, இயல்பாகவும், சில காட்சிகளில் மிகையாகவும் நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில், பெண்களின் மனதை பதற வைத்து விடுகிறார்.

குரூர, மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காயத்ரி, பயிற்சி மருத்துவராக நடித்திருக்கும் ஜாக்குலின் லிடியா, வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத், ஷீலாவின் தம்பியாக நடித்திருக்கும் விவேக் மோகன், தர்மதுரை ஜீவா, போஸ்ட் மேனாக நடித்திருக்கும் உமர் ஃபரூக் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யாவின் இரவு நேர ஒளிப்பதிவு பாராட்டு பெறுகிறது.

இசையமைப்பாளர் பாலசுப்ரமணியன்.ஜி’ யின் பின்ணணி இசை படத்திற்கு பலம்.

ஆதவன், வினோத் சார்லஸ் கும்பலிடம் சிக்கி, உயிர் பிழைக்க ஓடும் காட்சிகளில் நம்பகத்தனமை இல்லாமை, திக்.. திக் என இருந்திருக்க வேண்டிய திரைக்கதையில் சோர்வு ஏற்படுவதாலும் ரசிக்க முடியவில்லை.

கெவி கிராமம் போல் இன்றும் பல கிராமங்கள், அடிப்படைத் தேவைக்கு ஏங்கித் தவிப்பதை படமாக்கிய இயக்குநரையும், தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆக வேண்டும்.