குலேபகாவலி, ஜாக்பாட், காத்தாடி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ஹாரர் ‘கடி’ காமெடி படம், ‘கோஸ்டி’.
கோஸ்டி, திரைப்படத்தில் காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, ரெடின் கிங்ஸ்லி, டைகர் கார்டன் தங்கதுரை, விஜய் டிவி ஜெகன், சத்யன், ஆடுகளம் நரேன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, சுரேஷ் மேனன், சந்தான பாரதி, லொள்ளு சபா சாமிநாதன், தேவதர்ஷினி, ஶ்ரீமன், லிவிங்ஸ்டன், மதன்பாபு, பஞ்சு சுப்பு ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெய்யும், ராதிகா சரத்குமாரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
ஜாக்கப் ரத்தினராஜ், ஒளிப்பதிவு செய்திருக்கும் கோஸ்டி படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
மிகப்பெரிய தாதா கே எஸ் ரவிக்குமார். அவரை போலீஸ் அதிகாரியும் காஜல் அகர்வாலின் அப்பாவுமான ரகுவரனும் அவரது நண்பர்களும் சேர்ந்து கைது செய்து சிறையிலடைக்கிறார்கள். இதனிடையே ரகுவரன் இறந்துவிட்ட நிலையில் காஜல் அகர்வால் இன்ஸ்பெக்டராகிறார். தன்னை கைது செய்தவர்களை பழிவாங்க கே.எஸ்.ரவிக்குமார் சிறையிலிருந்து தப்பிக்கிறார். இதை அறியும் காஜல் அகர்வால் தன்னுடைய அப்பாவின் நண்பர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
உதவி இயக்குனர்களான யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, விஜய் டிவி ஜெகன் மூவரும் காஜல் அகர்வாலை தங்கள் கதைக்கு பொருத்தமானவர் என்பதால் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வரும் போது ஶ்ரீமனின் மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு ஜாடியில் இருக்கும் வாயுவை முகர்ந்து பார்த்ததால் இறந்து போகிறார்கள். இறந்த பின்னரும் காஜல் அகர்வாலை பின் தொடர்ந்து பல்வேறு தொல்லைகள் கொடுத்து அவரது இன்ஸ்பெக்டர் வேலையும் பறிபோகிறது.
காஜல் அகர்வால் அப்பாவின் நண்பர்களை காப்பாற்றினாரா? அவரது இன்ஸ்பெக்டர் வேலை திரும்ப கிடைத்ததா? என்பதே கோஸ்டி படத்தின் கதை!
இயக்குனர் கல்யாண் லாஜிக்கை விடுத்து ரசிகர்களை சிரிக்க வைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் சிரிப்பு வரவில்லை! ஒரு சில காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் ஆடுகளம் நரேன் பேய் ஓட்டும் காட்சி ஹைலைட் காமெடி. ஒரு சில காட்சிகள் பயமுறுத்தவும் செய்யும்!
ஒரு பெரிய காமெடி நடிகர்களின் கூட்டத்தை வைத்துக் கொண்டு ஏமாற்றி இருக்கிறார், இயக்குனர் கல்யாண்.
நீங்கள் ‘கடி’ காமெடியை ரசிப்பவர்கள், கோஸ்டி படத்தை பார்க்கலாம், சிரிக்கலாம்!