ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது – இயக்குநர் பேரரசு பேச்சு!

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் , இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை எஸ்.என்.பாசில் கவனித்துள்ளார்

இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், ஸ்ரீராம் கார்த்திக், பிரஜின்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் ராம்கி பேசும்போது,

“கோவிட் நிலவிய காலகட்டத்தில் ஊட்டியைச் சுற்றியுள்ள, இதுவரை படப்பிடிப்பு நடத்தாத பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு தான் அதற்கு முக்கியமான காரணம். படக்குழுவினரின் பாதுகாப்புக்காக, தினசரி பூஜை நடத்தும் அளவிற்கு நல்ல மனிதர். 25 வருடத்திற்கு முன் நான் நடித்த படங்களில் நட்டி உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். எல்லா இடங்களிலும் அவர் பெயரே கேட்கும். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அதேபோன்று எளிமையான மனிதராக இருக்கிறார். படத்தில் எங்கேயும் அவரது தலையீடு இல்லை. ஒரே நாளில் நடக்கும் கதை என்றாலும் அடுத்து என்ன நடக்கும், பணம் கிடைத்தால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை வைத்து விறுவிறுப்பாக இந்தப் படத்தை இயக்குநர் தனசேகரன் இயக்கி உள்ளார்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“ராம்கி ஹீரோவாக நடித்து வந்த சமயத்தில் கூட இப்படி ஒரு பாடல் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. இப்போது 3 கதாநாயகிகளுடன் அவர் ஆடுவதைப் பார்க்கும்போது ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மாஸ் ஹீரோக்கள் விரும்பும் கேமராமேனாக இருக்கிறார் நட்டி. இயக்குநர்களுக்கு இப்போது பெரிய மரியாதை இல்லை.. ஆனால் நடிகர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது என்பதால் பலபேர் நடிப்பு பக்கம் கிளம்பி விட்டார்கள்.. காரணம் நடிகர்கள் கையில்தான் சினிமா இருக்கிறது.  தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து சிரமம் தரக்கூடிய, தயாரிப்பாளர்கள் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.