திரைப்படங்கள் வெற்றி பெறாததற்கு டிக்கெட் கட்டணமே காரணம்! –  தயாரிப்பாளர், நடிகர் ரங்கராஜ்!

‘கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் இயக்குநர் ரங்கராஜ், நடிகை ஸ்ருதி நாராயணன், ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, டைகர் சக்கரவர்த்தி, ஷிவானி செந்தில், சத்யபதி, இஸ்மாயில், ஸ்ரீலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குநர் ரங்கராஜ் பேசுகையில்,

”கலைத் தாய்க்கு என் முதல் வணக்கம். சினிமாவில் நடிகராகி விட வேண்டும் என்று நான் 25 ஆண்டு காலமாக போராடிக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கேட்கும் இடங்களில் எல்லாம் பணம் பணம் என்ற ஒன்றைத்தான் கேட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் மன உளைச்சல் ஆகி, விலகி விடலாம் என தீர்மானித்து விட்டேன். அப்போது என்னுடைய நண்பர்கள் குறும்படங்களை இயக்கினார்கள், 15 லட்சத்தில் ஒரு படத்தினை தயாரிக்க முடியும் என்றார்கள். இது எனக்கு நம்பிக்கையை தந்தது. படத்தை  தயாரிக்க தொடங்கினேன். படத் தயாரிப்பு குறித்து எனக்கு எதுவும் அப்போது தெரியாது. படத்தின் பணிகள் தொடங்கிய பிறகுதான் 15 லட்சத்தில் ஒரு படத்தில் உருவாக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். முன்வைத்த காலை பின் வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து போராடினேன். சின்ன வயதில் இருந்தே நான் குவாலிட்டி விஷயத்தில் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன். இந்த சமயத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு பக்கபலமாக நின்றார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

எனக்கு சினிமா பின்னணி கிடையாது. அரசியல் பலம் கிடையாது. பணபலம் கிடையாது. கடைக்கோடி கிராமம் ஒன்றில் இட்லி சுட்டு விற்பனை செய்யும் அம்மாவின் மகன் நான். இன்று நான் ஒரு நடிகனாகி விட்டேன். இதனை என்னாலேயே நம்ப முடியவில்லை.

இந்த படத்திற்காக நிறைய நண்பர்கள் எனக்கு உதவினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் நன்றாக ஓடி லாபம் சம்பாதித்தால், எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் வெற்றி பெற்றால், கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதத்தை சினிமா துறையில் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்காக வழங்க திட்டமிட்டிருக்கிறேன்.

சிறிய முதலீட்டு திரைப்படங்கள் வெற்றி பெறாததற்கு காரணம் டிக்கெட் கட்டணம் தான். அஜித் குமாரை திரையில் 200 ரூபாய் கொடுத்து பார்ப்பார்கள். என்னை யார் 200 கொடுத்து திரையில் பார்ப்பார்கள். இதனால் சிறிய முதலீட்டு திரைப்படங்கள் தோல்வியை தான் தழுவும்.‌ அதனால் டிக்கெட் விலையை குறைத்தால் சிறிய முதலீட்டு திரைப்படங்களும் வெற்றி பெறும்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இருக்கும். அதை நீக்குவது சினிமா மட்டும் தான். சினிமா என்ற ஊடகம் தான் மக்களின் எல்லா வலியையும் நீக்கும்.

டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக இருக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.