‘என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான்’ – நடிகர் ஜீவா

எதைச்சொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது. இரு படங்கள் தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்களின் தாக்கம் இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய “துணிவின் பாடகன் பாந்த் சிங்” என்ற ஒரு புத்தகமும் வெளியீடப்பட்டது. இந்த நூலை தமிழில் கமலாலயன் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு எளியமனிதன் அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சாராம்சத்தை கொண்டது இப்புத்தகம். அதேபோல் ஜிப்ஸி படமும் அந்தக்களத்தை தாங்கி நிற்கக் கூடியதே.

 

விழாவில் நடிகர் ஜீவா பேசும்போது,

“ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நம்ம போன் நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ராஜு முருகன் ஒரு கம்ப்யூனிஸ்ட். இந்தமாதிரியான ஆடியோ லாஞ்ச்கள் தான் நிறைய நடக்க வேண்டும். பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்தமேடை மிகச்சிறப்பான மேடை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப்படம் மூலம் தந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி” என்றார்