விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில், அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னச்சாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. காதலர்களிடையே இருக்கும் மிகப்பெரிய உளவியல் சிக்கலான ‘ஓவர்-பொசஸிவ்னஸ்’ (Over-possessiveness) என்ற அதீத ஆதிக்கக் குணத்தையும், அதன் விளைவுகளையும் மையமாக வைத்து ஒரு நேர்மையான வாழ்வியல் கதையாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
கதையின் நாயகன் ஏகன் நன்னடத்தை விதிமீறல் காரணமாகத் தான் படித்து வந்த கல்லூரியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுகிறார். இதனால் மற்ற கல்லூரிகளில் அவருக்கு இடம் கிடைக்காமல் போக, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே படிக்கும் ஒரு பிரத்யேகக் கல்லூரியில் அவருக்குப் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் பெண்கள் உலகத்தில் ஏகனுக்கு ஏற்படும் சுவாரசியமான அனுபவங்களுக்கு நடுவே, சக மாணவியான ஸ்ரீதேவி அப்பாலா மீது அவருக்குக் காதல் மலர்கிறது. தொடக்கத்தில் மிக அழகாக நகரும் இவர்களின் காதலில், ஏகனின் அதீத அன்பும், காதலியைத் தன் முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நினைக்கும் போக்கும் பெரும் விரிசலை ஏற்படுத்துகிறது. இந்த ஈகோ மற்றும் ஆதிக்க மோதலால் இருவரும் பிரிகிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு ஐடி நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கும் ஏகனின் வாழ்க்கையில் ஃபெமினா ஜார்ஜ் என்ற பெண் இன்டர்ன்ஷிப்பிற்காக நுழைகிறார். கடந்த காலக் கசப்புகளால் காதலனைப் பிரிந்த ஃபெமினாவும், ஏகனும் காதலித்து லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழத் தொடங்குகிறார்கள். ஆனால், அங்கும் ஏகன் தனது பழைய பொசஸிவ் குணத்தைக் காட்டத் தொடங்க, பிரச்சனை வெடிக்கிறது. இறுதியில் ஏகனின் குணத்திற்கான காரணத்தைத் தேடி அவனது முன்னாள் காதலி ஸ்ரீதேவியை நோக்கி ஃபெமினா பயணிப்பதே ‘ஹைக்கூ’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள ஏகன், கல்லூரி மாணவனாகவும், ஐடி நிறுவன அதிகாரியாகவும் இரண்டு வெவ்வேறான பரிமாணங்களில் தனது உடல்மொழி மற்றும் நடிப்பால் கவருகிறார். பெண்களுக்கிடையே மாட்டிக் கொண்டு தவிக்கும் ஆரம்பக் காட்சிகளின் எதார்த்தமும், காதலி பிரியும் போது கோபத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான நடிப்பும் அவர் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறது. சரியான கதைகளைத் தேர்வு செய்தால் தமிழ் சினிமாவில் அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் உண்டு. ஏகனின் முதல் காதலியாக வரும் ஸ்ரீதேவி அப்பாலா தனது வசீகர தோற்றத்தாலும், அழுத்தமான நடிப்பாலும் மனதில் நிற்கிறார். நடிப்பதற்குப் பல சவாலான காட்சிகள் கொண்ட இரண்டாவது காதலி பாத்திரத்தில் ஃபெமினா ஜார்ஜ் குறை சொல்ல முடியாத சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார். இவர்களுடன் மைம் கோபி, அதிர்ச்சி அருண், இந்துமதி மணிகண்டன், ஸ்ரீதேவி எஸ் கே, அதியமான் ஏ, சுப்பிரமணியன் சேது எனப் படத்தில் வரும் துணைக் கதாபாத்திரங்களும் தங்களின் பங்களிப்பை மிகச் சரியாகச் செய்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படியாகவும் வண்ணமயமாகவும் கேமராவில் கடத்தியுள்ளார். இசையமைப்பாளர் சித்து குமாரின் இசையில் வரும் ‘கருவிழி களவு நீ’ என்ற மெலடி பாடல், படம் முடிந்த பிறகும் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் ரகம். சக்தி ப்ரனேஷின் கச்சிதமான படத்தொகுப்பு கதையின் ஓட்டத்திற்குத் துணை நின்றுள்ளது. இன்றைய காலகட்டத்து இளைஞர்களின் காதல், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை முறை மற்றும் உறவுச் சிக்கல்களை எதார்த்தமான கோணத்தில் பார்க்க விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு, இந்த ‘ஹைக்கூ’ திரைப்படம் ஒரு புதுமையான தியேட்டர் அனுபவமாக இருக்கும்.