வீரா என்ற ‘ஹரி ஹர வீரமல்லு’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், பவன் கல்யாண். அவர், மக்களை இம்சிக்கும் மன்னர்களிடம் இருக்கும் செல்வங்களை கொள்ளையடித்து மக்களுக்கு உதவுகிறார். முகலாய மன்னர் ‘ஒளரங்கசீப்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், பாபி தியோல். இவர் இந்தியாவில் படையெடுக்கும் காலத்தில், இந்து கோவில்களில் தங்கங்களையும், வைரங்களையும், கொள்ளையடித்து டெல்லிக்கு அள்ளிச்செல்கிறார். அதில் விலையுயர்ந்த கோஹினூர் வைரமும் அடங்கும். அந்த கோஹினூர் வைரத்தை கைப்பற்ற இந்து குறுநில மன்னர் ஒருவர் வீராவிடம் உதவி கேட்கிறார். வீரா என்ன செய்தார். என்பதை கற்பனை கலந்த, உண்மையுடன் சொல்வதே, ‘ஹரி ஹர வீரமல்லு’.
இயக்குநர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா, இந்தியாவில், முகலாய மன்னர்களின் படையெடுப்பு. இந்துக் கோயில்களில் கொள்ளை. இந்துக்கள் அனுபவித்த கொடுமை. ஆகியவற்றை, பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன், சுவாரசியமாகச் செல்லியிருக்கிறார். ஒரு கமர்ஷியல் படத்திற்கு என்ன தேவையோ அதையும் சரியாக செய்திருக்கிறார்.
‘ஹரி ஹர வீரமல்லு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவன் கல்யாண், சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். படம் முழுக்க அதிரடி, பிரமாண்ட சண்டைக்காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கிறார். நிதி அகர்வாலுடனான காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். அவரது அரசியல் வாழ்க்கைக்கு இந்தப்படம் பெரிய அளவில் உதவியிருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால், அழகாக வலம் வருகிறார். அவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும் கிடைத்த காட்சிகளில் முத்திரை பதித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் வெவ்வேறு விதமான சாயல்களில் தோன்றியிருக்கிறார். நீண்டகால படப்பிடிப்பின் காரணமாக இருக்குமோ?!
முகலாய மன்னர் ஒளரங்கசீப்பாக நடித்திருக்கும் பாபி தியோல், படம் முழுவதும் கர்ஜிக்கிறார். தனது சிறந்த நடிப்பின் மூலம் கொடுங்கோல் மன்னன் ஒளரங்கசீப்பை கண்முன் நிறுத்தியிருக்கிறார். மற்றபடி சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேஹி, ஈஸ்வரி ராவ், விக்ரமஜீத் விர்க், சச்சின் கடேகர், ரகு பாபு, சுனில், கபிர் பெடி, சுப்பராஜு, கபிர் துஹான் சிங், தணிகலபரணி உள்ளிட்டவர்களும் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கிறது. பெரும்பாலான காட்சிகளுக்கு பிரம்மாண்டம் சேர்த்துள்ளது. ளிப்பதிவாளர்கள் ஞானசேகர் வி.எஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு படத்தின் தரத்தினை மேலும் உயர்த்தியிருக்கிறது.
ஒரு சில கிராபிக்ஸ் காட்சிகளில் மட்டுமே குறை. மற்றபடி சூப்பர். செட் எது? கிராபிக்ஸ் எது? எனத்தெரியாத அளவில் இருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல், கலை இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆகியோரது பணி மிகச்சிறப்பு!
எழுதி, இயக்கியிருக்கும் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா, இந்திய வரலாற்றோடு தனது கற்பனையை மிகைப்படுத்தி காட்சிப்படுத்தியிருந்தாலும், பிரமாண்டமான ஆக்ஷன் கமர்ஷியல் படத்தினை கொடுத்துள்ளார். மதம் சார்ந்த காட்சிகள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.
‘ஹரி ஹர வீரமல்லு’ மாஸ்!