ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு  ஹரிஷ் கல்யாண் கொடுத்த வாக்குறுதி!!

தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்  என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் பி.டி .செல்வகுமார்.  நடிகர் விஜய்யின் இன்றைய அபரீத வளர்ச்சிக்கு முக்கியமான நபர்களில் ஒருவராக இருந்தவர். சினிமா துறையை தாண்டி கலப்பை மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் வேலை இழந்து தவித்த ஆட்டோ ஓட்டும் பெண்கள் 150 பேருக்கு அரிசி மூட்டைகளை வழங்கி உதவி செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று சென்னை வடபழனியில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஹரிஷ் கல்யாண் பங்கேற்று கலப்பை மக்கள் இயக்கத்துடன் இணைந்து ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு உதவி செய்தார்.  ‌‌

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசும்போது….

‘ கலப்பை மக்கள் இயக்கம் மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இதனைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுடன் இணைந்து நானும் செயலாற்றுவது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கென தனி ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் அவர்களுக்கான பிரத்யேக மொபைல் ஆப் உள்ளிட்டவைகளை வடிவமைத்து தர பிடி செல்வகுமார் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.’ என வாக்குறுதி அளித்துள்ளார்.

கலப்பை மக்கள் இயக்கத்தலைவர் பிடி செல்வகுமார் அவர்கள் பேசியதாவது…

‘ இந்த இயக்கத்தின் மூலமாக வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். குடும்பத்திற்காக ஆட்டோ ஓட்டி இன்றைய சமுதாயத்தில் போராளிகளாக வாழ்ந்துவரும் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு அரிசி மூட்டை வழங்கி உதவியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடன் இணைந்து இந்த விழாவில் கலந்துகொண்டு உதவிய ஹரிஷ் கல்யாண் அவர்களுக்கு நன்றி என பேசினார். வறுமையில் வாடும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.’ என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆட்டோ ஓட்டும் பெண்கள் சங்கத்தின் தலைவி மீனாட்சி, ‘எங்களையும் எங்களது கஷ்டங்களையும் புரிந்து கொண்டு எங்களுக்கு அரிசி முட்டை வழங்கிய ஹரிஷ் கல்யாண் மற்றும் கலப்பை மக்கள் இயக்கத்தலைவர் பிடி செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. என மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டார். எங்களுக்கு என தனி ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் பிரத்தியேக மொபைல் ஆப் ஆகிவற்றை வடிவமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த ஹரிஷ் கல்யாணுக்கும் நன்றி  என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வி கே வெங்கடேசன், மக்கள் தொடர்பாளர் ராஜ்குமார், பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.