மனம் மாறும் தபால்காரர் – ‘ஹர்காரா’ – விமர்சனம்!

Harkara Movie Review

Starring :

Ram Arun Castro
Kaali Venkat
Gowthami Chowdary
Pichaikaran Moorthy
Jayaprakash Radhakrishnan
Nikola Fuster

Directed by : Ram Arun Castro
Written by : Ram Arun Castro
Produced by : Kalorful Beta Movement

Cinematography : Philip R Sunder,
Lokesh Elangovan
Edited by : Dani Charles
Music by : Ramshanker
Production company : Kalorful Beta Movement

உலகின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு, சுமார் 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்திய அஞ்சல் துறை, உலகின் மிகப்பெரிய துறை. இந்தியாவின் முதல் தபால்காரர் ‘ஹர்காரா’, என அறியப்படுகிறார். அவரை குறித்து, அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

தேனி மாவட்டத்தின் மலை குக்கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில், புதிய போஸ்ட் மேனாக பணியமர்த்தப்படுகிறார், காளி வெங்கெட். அங்கு வாழும் மக்களின் நடவடிக்கைகளால், அவர், அந்த கிராமத்தில் இருந்து எப்படியாவது வேறு இடத்திற்கு பணி மாறுதல் பெற முயற்சிக்கிறார். அந்த முயற்சி தோல்வியுறுகிறது. இதனால் கலெக்டருக்கு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து மனு எழுதுவது போல், போஸ்ட் ஆஃபிஸூக்கு பதிலாக கூட்டுறவு வங்கி அமைத்து தரும்படி ஒரு மனுவை தயார் செய்து அதை கலெக்டரிடம் கொடுக்க முடிவு செய்கிறார்.

இந்நிலையில், அந்த கிராமத்தின் மலை உச்சியில் இருக்கும் மாரியம்மாள், என்பவருக்கு அரசாங்கத்திடம் இருந்து ஒரு கடிதம் வருகிறது. காளி வெங்கெட் அதை கொண்டு போய் சேர்க்கும் வழியில், முதியவர் ‘பிச்சைக்காரன்’ மூர்த்தியின் மூலமாக அந்த கிராமத்தில் வசித்த மாதேஸ்வரன் என்பவரை பற்றி தெரிந்து கொள்கிறார்.

அதன் பிறகு காளி வெங்கெட். அந்த கிராமத்திலேயே போஸ்ட் மேனாக பணி செய்ய விரும்புகிறார். ஏன், எதற்காக? என்பதே ‘ஹர்காரா’ படத்தின் கதை!

முதல் சில காட்சிகளிலேயே சினிமா கற்பனையை மிஞ்சிய காட்சிப்படுத்தலும், நடிகர்களின் அதீத நடிப்பும், காட்சிகளை ரசிக்க முடியாமல் செய்து விடுகிறது. ஒரே படத்தில் இரண்டு கதைகளை சொல்லிய இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, இரண்டு கதைகளையும் சரியாக சொல்ல முடியாமல் திணறுகிறார். மேலும் இரண்டு கதைகளுமே மனதை தொடவில்லை, என்பது கூடுதல் சோகம். காட்சிகளை அழுத்தமாக பதிவு செய்யா நிலையில், திரைக்கதை மெதுவாக செல்வதும் படத்தின் பலவீனம். குறிப்பிட்டு சொல்லும் படி எந்த காட்சியும் இல்லை.

இப்படத்தின் ஒரே ஆறுதல் ஒளிப்பதிவு மட்டுமே. பிலிப். R. சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு, மலைக் கிராமத்தின் அழகினை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது. கண்களுக்கு குளுர்ச்சியூட்டுகிறது.

வெகுஜன மக்களுக்கும், போஸ்ட் மேனுக்கும் உள்ள தவிர்க்க முடியாத பந்தத்தை, காட்சிப்படுத்தலில் தவறியிருக்கிறார்கள்.

மொத்தத்தில், ‘ஹர்காரா’ – சிந்தனை புதிது! செயலாக்கம் பழுது!