மோகன்லால் நடிக்கும், ஆக்சன் என்டர்டெய்னர் ‘விருஷபா’. பிரமாண்டமான முறையில் தயாராகும் இத்திரைப்படம் பற்றிய செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகைகள் ஷனாயா கபூர் மற்றும் சஹ்ரா எஸ். கான் ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள், என இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ வி எஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்தினை சார்ந்த தயாரிப்பாளர் ஜூஹி ப்ரேக் மேத்தா உறுதிப்படுத்தி இருக்கிறார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் மகளான ஷனாயா கபூர் இந்த படத்தில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவர் நடிகர் ரோஷன் மேகாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார். இவருடன் இந்தியாவின் பாப்பிசை நட்சத்திரமாக பிரபலமடைந்திருக்கும் சஹ்ரா எஸ். கான் எனும் நடிகையும் அறிமுகமாகிறார். இவர் முன்னாள் நட்சத்திர நடிகையான சல்மா ஆகாவின் மகளாவார். இந்த திரைப்படத்தின் மூலம் இருவரும் பான் இந்திய அளவிலான நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். சஹ்ரா எஸ். கான் இப்படத்தில் இடம்பெறும் பீரியாடிக் பகுதியில் ரோஷன் மேகாவிற்கு ஜோடியாக வீரம் செறிந்த இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சில அதிரடியான சண்டைக் காட்சிகளிலும் இவர் நடிக்கிறார்.
திறமை மிக்க அழகிகளான ஷனாயா கபூர் மற்றும் சஹ்ரா எஸ். கான் ஆகியோர் இடம்பெறுவதால் இந்த ஆற்றல்மிக்க படைப்பிற்கு மேலும் கவர்ச்சியும், அழகும் இணைந்திருப்பது உறுதியாகிறது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் ஜூஹி ப்ரேக் மேத்தா பேசுகையில்,
” விருஷபா படத்திற்காக ஷனாயா கபூர் நடிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அவரது திரையுலக அறிமுகம் பார்வையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அவர் எங்களுடன் இணைந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். சல்மா ஆகாவின் மகளான சஹ்ராவை பொருத்தவரை நான் அவரை பார்த்திருக்கிறேன். அவர் ‘கோஜ்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவரது நடிப்புத் திறமையால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். அவர் அச்சமற்ற போர் வீரராகவும், இளவரசியாகவும் நடிக்க பொருத்தமானவர். இதற்காக படத்தில் அவர் நடித்திருக்கும் தோற்றத்தை காண நாங்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் நந்த கிஷோர் பேசுகையில்,
” ஷனாயா மற்றும் சஹ்ரா இருவரும் தோற்றத்திலும், திறமையிலும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறார்கள். அவர்கள் மிகவும் திறமையானவர்கள் மட்டுமல்ல கடினமாக உழைக்கும் இளம் நடிகர்கள். ஒரு இயக்குநராக என்னை பொருத்தவரை நான் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்புகிறேன். நடிகர்கள் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட எங்களின் கூட்டு பங்களிப்பை நாங்கள் அனுபவிக்க ஆவலாக உள்ளோம்” என்றார்.
நடிகை ஷனாயா கபூர் பேசுகையில்,
” கேமராவை எதிர்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன். இந்த படத்திலிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கும். கதைக்களம் என்னுடன் தங்கி இருக்கும். இந்த திரைப்படம்- அனைத்து நட்சத்திர நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைகளை கொண்டுள்ளது. மேலும் இது மிகப்பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. இது போன்ற வாய்ப்பு இளம் நடிகருக்கு கிடைக்கும் போது உற்சாகமாகவும், நடிப்பதில் உத்வேகமாகவும் இருக்கும். குறிப்பாக இளம் நடிகர் ஒருவரின் தொழில் முறையிலான வாழ்க்கையின் தொடக்க நிலையில்… இது கனவு நனவானது போன்றதாகும். மோகன்லால் சாருடன் விருஷபாவில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகை சஹ்ரா எஸ். கான் பேசுகையில்,
” விருஷபா எனது முதல் பான் இந்திய வெளியீடாகும். இது ஒரு கனவு நனவானது போன்றது. மோகன்லால் சார் போன்ற நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்களை கொண்ட இப்படத்தில் இடம்பெற்றிருப்பதும், அவருடன் திரையில் எங்களது நடிப்பை பகிர்ந்து கொள்வதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். நான் இப்படத்தின் பீரியாடிக் பகுதியில் நடிக்கிறேன். இதன் தோற்றம்.. மிகப்பெரியது. ரோஷன் உடன் ஜோடியாக நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் அவருக்கு இதுபோன்ற திரை தோற்றம் கிடைத்துள்ளது. எனது கதாபாத்திரத்தையும் அவை வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தையும் அனைவரும் காண வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்களுடைய இந்த பெருமை அனைத்தும் எங்கள் இயக்குநர் நந்த கிஷோருக்கு தான் சேரும். இந்த பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படம். வெளியாகும் வரை அனைவரும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்” என்றார்.
‘விருஷபா’ திரைப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலி பிலிம்ஸ், ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. நந்தகிஷோர் இயக்கி வரும் இந்த திரைப்படத்தை ( ஏ வி எஸ் ஸ்டுடியோஸ்) அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி , ஜூஹி பரேக் மேத்தா, சியாம் சுந்தர் (ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் மூவிஸ்) தயாரித்துள்ளனர்.