தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின் படி நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாக அனுமதியளிக்கப்பட்ட ‘செய் ’படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியிட உதவவேண்டும் என்று அப்படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
‘ட்ரிப்பி டர்ட்டில்’ புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் செய். இந்த படத்தில் நகுல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு.
‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதன் போது, படத்தின் நாயகன் நகுல், நாயகி அன்ஷால் முன்ஜால், படத்தின் இயக்குநர் ராஜ்பாபு, தயாரிப்பாளர் மன்னு, நடிகர் ப்ளாரன் பெரைரா , நடிகை அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் நாயகன் நகுல் பேசுகையில், ‘இந்த படத்தை நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியிடலாம் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்தது.
நாங்கள் இந்த படத்தை கேரளாவிலும் வெளியிடுவதால் அங்கு இதற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தோம். அதை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி கிடைத்தது. அதில் ‘செய் ’திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 16 ஆம் தேதி வெளியாகும். ஆனால் 150 ஸ்கீரின்களுக்கு பதிலாக 60 அல்லது 70 ஸ்கிரீன்களில் தான் வெளியாகும் என்றிருந்தது. இதையறிந்ததும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தோம்.
நாங்கள் படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தோம். அப்போது திரைத்துறையில் வேலை நிறுத்தம் நடைபெற்றதால் நாங்கள் சரியான தேதிக்காக காத்திருந்தோம். அதன் பிறகு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒழுங்குமுறை குழுவின் அனுமதிக்காக காத்திருந்தோம். நாங்கள் சங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றுவது என்றும் தீர்மானித்தோம்.
அதன் பிறகு நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசி, நவம்பர் 16 ஆம் தேதி ‘செய்’ படம் வெளியாகும் என்றும், தமிழகத்தில் 150 ஸ்கிரீனில் வெளியாகும் என்றும் உறுதியளித்தார்கள். நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தோம்.
ஏனெனில் படத்தின் தயாரிப்பாளர் புதிது. இயக்குநரும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். அதற்காக யாருடைய மனதும் புண்படுத்தவேண்டாம் என்று காத்திருந்து, நவம்பர் 16 ஆம் தேதியை ஒப்புக்கொண்டோம்.
ஆனால் இன்று எதிர்பாராத வகையில் நவம்பர் 16 ஆம் தேதியன்று படம் வெளியாகும். ஆனால் எங்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 150 சென்டர்களில் படம் வெளியாகாது என்றும், அந்த தேதியில் விஜய் அண்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன் ‘என்ற படமும் வெளியாகும் என்றும் சொன்னார்கள்.
இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். திட்டமிட்டப்படி, செய் 150 ஸ்கிரீனில் வெளியாகுமா? ஆகாதா? என்ற மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறோம்.
எங்களுடைய படத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியீட்டிற்கான அனுமதி கடிதம் அளித்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த படத்திற்கு இதுவரை வழங்கவில்லை என்று கேள்விப்படுகிறோம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்கள் எங்களுடைய படத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய படமான ‘செய் ’படத்தை திட்டமிட்டபடி வெளியிட உதவுங்கள் என்று திரையுலகில் உள்ள அனைவரிடம் அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறோம்.’ என்றார்.
படத்தின் நாயகி அன்ஷால் முன்ஜால் பேசுகையில்,‘இந்த படம் திரில்லர் ஜேனர் என்றிருந்தாலும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாவதை பெருமிதமாக கருதுகிறேன்.’ என்றார்.
தயாரிப்பாளர் மன்னு பேசுகையில்,‘ நான் தமிழ் திரையுலகிற்கு புதிய தயாரிப்பாளர் என்பதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ஆதரவாக இருக்கிறது. அவர்களின் இந்த ஒத்துழைப்பிற்காக நாங்கள் எங்களுடைய படக்குழுவினரின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒட்டுமொத்த திரையுலகினரின் ஆதரவுடன் திட்டமிட்டப்படி ‘செய் ’படம் நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம்.’ என்றார்.