வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நாயகன் நானி இன்று சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
அப்போது நடிகர் நானி கூறியதாவது..,
‘நான்னா’ என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம், அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. படத்தில் நிறைய முறை ‘நான்னா’ என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம். இது ஒரு மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப் படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 திரையரங்குகள் கொண்டாடும் படமாக இது இருக்கும்.
ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என கண்டிப்பாக உங்கள் மனதில் இடம் பிடிக்கும் படமாக இருக்கும். தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும். டிசம்பர் 7 உங்களை திரையரங்குகளில் சந்திக்கிறேன்.
‘அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் என பிரிக்க முடியாது. அன்பு ஒன்றுதான். அம்மா படங்கள் எல்லாம் நிறைய வந்துவிட்டன, இப்போது அப்பா படங்கள் வர ஆரம்பித்துள்ளன. எனக்கு தமிழ்ப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன்.
ஆரம்பத்தில் தமிழ் இயக்குநர்களோடு வேலை பார்த்தேன். ஆனால் அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் ‘பாகுபலி’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் வந்த பிறகு தமிழ் நடிகர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது, எனவேதான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன். தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும். ஒரு மிகச் சிறந்த தமிழ் இயக்குநர், எனக்குப் பிடித்தவர், அவர் எனக்காக ஒரு கதை சொல்லியிருக்கிறார். விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வரும். காதலை உணர்வுப்பூர்வமாக சொன்னால் அதைவிட பெரிய ஆக்சன் திரில்லர் எல்லாம் கிடையாது. அது பயங்கரமாக இருக்கும். அதை இந்தப் படத்தைப் பார்க்கும்போது உணர்வீர்கள்.
எனக்கு இந்தப் படத்தில் சவாலாக இருந்தது என்னவெனில், நான் ஏற்கனவே ‘ஜெர்ஸி’யில் அப்பாவாக நடித்துவிட்டேன். அது மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர், மீண்டும் அதேபோல் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நடிப்பதுதான் சவாலாக இருந்தது. இந்தப் படம் ஆண் பெண் உறவை மிகச் சிறப்பாக பேசும் படமாக இருக்கும்,’ என்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான்-இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று ‘hi நான்னா’ வெளியாகிறது.