ஆர். கே. செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில், இரட்டை இயக்குநர்கள் சூரியக்கதிர் காக்கள்ளர் – கே. கார்த்திகேயன் இயக்கத்தில் விஜய் கனிஷ்கா, ஸ்மிருதி வெங்கட், ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், சித்தாரா, அபி நட்சத்திரா, ராமச்சந்திர ராஜு, முனீஸ்காந்த் மற்றும் பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், ஹிட்லிஸ்ட். பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.
நாயகன் விஜய் கனிஷ்கா, அம்மா சித்தாரா மற்றும் தங்கை அபிநட்சத்திராவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களது குடும்பம், வள்ளலார் கொள்கைகளை பின்பற்றி வருகிறது. ஒரு நாள், ஒரு மர்ம மனிதன் கனிஷ்காவின் அம்மாவையும், தங்கையயும் கடத்தி அவர்களை கொன்று விடுவதாக மிரட்டுகிறான். அவர்களை உயிரோடு விடவேண்டும் என்றால், தனக்காக சில கொலைகளை செய்ய வேண்டும், என நிர்பந்திக்கிறான். இந்த மர்ம மனிதனின் மிரட்டல் குறித்து, காவல்துறை அதிகாரி சரத்குமாரிடம் கனிஷ்கா முறையிடுகிறார். மிரட்டும் அந்த மர்ம மனிதன் யார், எதற்காக? கொலை செய்ய நிர்பந்திக்கிறான். போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்வதே ‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் கதை.
அம்மாவையும், தங்கையயும் காப்பாற்றப் போராடும் அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தில் விஜய் கனிஷ்கா, தன்னை முழுமையாக அர்பணித்து இருக்கிறார். அதேபோல் வில்லனுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சிகளில் ஆக்ஷன் பிரியர்களை கவர்ந்து விடுகிறார். அப்பாவியாகவும், ஆக்ரோஷமாகவும் இருவேறு மாறுபட்ட நடிப்பினில், தன்னை ஒரு நடிகராக நிலை நிறுத்தியிருக்கிறார். இடைவேளைக்கு முன்னர் விஜய் கனிஷ்கா, கே ஜி எஃப் வில்லனுடன் மோதும் சண்டைக் காட்சியில் அவரது கடின உழைப்பு தெரிகிறது.
காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கிறார், ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார். அவருடைய கதாபாத்திரம், படம் முழுவதும் பயணிப்பது போல் இருக்கிறது. ஒரு சண்டைக்காட்சியில் வில்லனுடன் பயங்கரமாக மோதுகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில், மர்ம மனிதனை பற்றி விவரிக்கும் காட்சிகள், சுவாரசியமான திருப்புமுனை காட்சிகள். கதையை பொறுத்தவரை வழக்கமான ஒன்றாக இருந்தாலும், திரைக்கதை சுவாரசியமாக இருக்கிறது. லாஜிக் மீறல்கள் சில இடங்களில் இருக்கிறது. இருந்தாலும் அது திரைக்கதையை பாதிக்கவில்லை.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கேற்றபடி, மிடுக்காக இருக்கிறார், சரத்குமார். விஜய் கனிஷ்காவின் அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சித்தாரா, தங்கையாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, அனுபமா குமார், ராமச்சந்திரன்க்ஷ் மருத்துவமனை டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர், படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
பாலசரவணன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவரையும் இன்னும் பயண்படுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண் மற்றும் இசையமைப்பாளர் சி.சத்யா ஆகியோரது பங்கு படத்தின் பலம்.
யூகிக்கமுடியாத காட்சியமைப்புகளுடன், க்ளைமாக்ஸ் வரை படம் பார்ப்பவர்களை பதட்டத்துடனே வைத்திருந்த இரட்டை இயக்குநர்களான சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன் ஆகிய இருவரும், லாஜிக்கினை மறந்து ஒரு பார்க்கக்கூடிய க்ரைம் த்ரில்லரை கொடுத்துள்ளனர்.
மன்னிக்க முடியாத லாஜிக் மீறல், ஒரு சேவலை கனிஷ்கா வெட்டும் காட்சி! இந்தக்காட்சியில், இயக்குநர்களின் ‘ஒரு உயிர் துடிப்பதை கண்டு துடிக்கும் உயிரே புனிதமானது’ தத்துவம் காலி.
‘ஹிட் லிஸ்ட்’ , ஒருமுறை பார்க்கக்கூடிய க்ரைம் த்ரில்லர்.